பெண் டாக்டர் தற்கொலை: அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றவாளிகளுக்கு கேடயமாக இருக்கும் போது, யாரிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்? ராகுல் காந்தி கேள்வி..!
Rahul Gandhi asks from whom can we expect justice
மஹாராஷ்டிராவில் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றவாளிகளுக்கு கேடயமாக மாறும்போது, யாரிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்? என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக, போலீசார் தன்னை பலாத்காரம் செய்ததுடன், மனரீதியாக துன்புறுத்தியதாக கையில் குறிப்பு எழுதி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மஹாராஷ்டிராவின் சதாராவில் டாக்டர் துன்புறுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டது, மனசாட்சியை உலுக்கும் ஒரு சோகம். மற்றவர்களின் துன்பத்தைத் தணிக்க விரும்பிய ஒரு நம்பிக்கைக்குரிய டாக்டர், குற்றவாளிகளின் சித்ரவதைக்கு பலியானார்.

குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த அப்பாவிப் பெண்ணுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்தனர். இது தற்கொலை அல்ல. இது திட்டமிட்டு செய்த கொலை. (இது நிறுவனக் கொலை). அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றவாளிகளுக்கு கேடயமாக மாறும்போது, யாரிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்?
இந்த சம்பவம் பாஜ அரசின் மனிதாபிமானமற்ற மற்றும் இரக்கமற்ற தன்மையை அம்பலப்படுத்துகிறது. நீதிக்கான இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்.' என்று இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
English Summary
Rahul Gandhi asks from whom can we expect justice