12 ஆண்டுகள் வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம்: போலீஸ் கான்ஸ்டபிள் மோசடி: மத்திய பிரதேச போலீசார் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய போலீஸ் கான்ஸ்டபிளின் நூதன மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர் ஒருவர், போபால் போலீஸ் லைன்ஸ் பகுதியில் பணி அமர்த்தப்பட்டார். பின்னர் அவர் சாகர் போலீஸ் பயிற்சி மையத்தில் அடிப்படை பயிற்சிகளை பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் பயிற்சி மையத்திற்கு செல்லாமல் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இது குறித்து அந்த போலீஸ் கான்ஸ்டபிள் மேலதிகாரிக்கு எந்த தகவலோ, விடுப்பு குறித்தும் விண்ணப்பிக்காத அவர், தன்னுடைய பணி ஆவணங்களை மட்டும் போபால் போலீஸூக்கு கூரியரில் அனுப்பி வைத்துள்ளார். அவர்களும் இது குறித்து எந்த ஆய்வும் செய்யாமல், அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அத்துடன், குறித்த போலீஸ் கான்ஸ்டபிள் பற்றி சாகர் போலீஸ் பயிற்சி மையத்தில் போபால் போலீசார் விசாரிக்கவும் இல்லை.  ஆனால், அவருக்கு மாதந்தோறும் ரூ. 25,000 வீதம் 12 ஆண்டுகளுக்கு ரூ.28 லட்சம் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஊதிய தர மதிப்பீட்டின் போது, இந்த மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஆஜராகியுள்ளார். அப்போது அவர், தான் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, கான்ஸ்டபிளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பளமாக வாங்கிய ரூ.28 லட்சத்தை திருப்பி செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் உதவி ஆணையர் அங்கிதா கட்டேர்கர் கூறியுள்ளதாவது: ஒரு நாளும் வேலை செய்யாத ஒருவருக்கு சம்பளம் எப்படி தொடர்ந்து வழங்கப்பட்டது என்பது குறித்து உள்துறை விசாரணை நடைபெறுகிறதாகவும், இதுவரை, அவர் ரூ.1.5 லட்சத்தை துறைக்குத் திருப்பி அனுப்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீதமுள்ள தொகையை தனது எதிர்கால சம்பளத்திலிருந்து கழிப்பதன் மூலம் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளாதாகவும், அவர் தற்போது போபால் காவல் எல்லையில் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணை இன்னும் நடந்து வருகிறதாகவும், மேலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்றும், மூத்த காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், இந்த விஷயத்தை கையாள்வதில் அல்லது மேற்பார்வையிடுவதில் அலட்சியமாக இருந்ததாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில காவல் உதவி ஆணையர் அங்கிதா கட்டேர்கர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police constable in Madhya Pradesh cheated by taking Rs 28 lakh salary without working for 12 years


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->