ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு; புதிய கட்டணங்களை அறிவித்த மத்திய அரசு!
Passport fees to increase from July 1 Central Government announces new rates
வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெற திட்டமிட்டுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஸ்போர்ட் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் (புதியது அல்லது புதுப்பிப்பு) பெறுவதற்கான கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பாஸ்போர்ட்டை தத்கால் முறையில் பெற விரும்புவோர் ரூ.5,000 செலுத்த வேண்டும்.
60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தத்கால் முறையில் இதைப் பெற ரூ.6,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,000-லிருந்து ரூ.1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தத்கால் முறையில் பெற ரூ.4,250 செலுத்த வேண்டும்.
பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, புதிய 36 பக்க பாஸ்போர்ட் பெற ரூ.5,000, தத்கால் முறையில் ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படும். 60 பக்க பாஸ்போர்ட்டுக்கு இதைவிட அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும், Police Clearance Certificate (PCC), Surrender Certificate, Global Entry Program Verification உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணமும் ரூ.750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவீத கட்டண சலுகை தொடரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே, புதிய கட்டண உயர்வுக்கு முன் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 1-க்கு முன்பாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால், தற்போதைய கட்டணத்தில் சேவையைப் பெற முடியும்.
English Summary
Passport fees to increase from July 1 Central Government announces new rates