உச்ச நீதிமன்றத்திற்கு இன்று முதல் புதிய இணையதளம்.!
new website open in supreme court
நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். இதேபோல், மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றத்திற்கு என்று https://www.sci.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் முழு செயல்பாடு இன்று முதல் தொடங்குகிறது. இதில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் உள்ளிட்டவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் மூலம் வழங்கப்படும் ஆன்லைன் சேவைகளான வழக்கு தாக்கல், உச்சநீதிமன்றத்தில் பார்வையாளருக்கு வழங்கப்படும் 'இ-பாஸ்', தீர்ப்பு நகல்கள் பெறுவது உள்பட அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். மிக முக்கியமாக நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைகளை பொதுமக்கள் நேரலையில் காண்பதுடன் பழைய வழக்கு விசாரணைகளையும் பார்வையிடுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரம், 'வாட்ஸ்-அப்' மூலம் வழக்கு விவரங்களை வக்கீல்களுக்கும், சம்பந்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்து இருந்தார். அந்த சூழ்நிலையில் இந்த புதிய இணையதளமும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருவது மக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.
English Summary
new website open in supreme court