சிலிண்டர் முன்பதிவில் புதிய கட்டுப்பாடு: இனி 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே புக் செய்ய முடியும்...!
New Restriction Cylinder Booking Now You Can Book Only Once Every 25 Days
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போர்ச் சூழல் காரணமாக அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ள நிலையில், சமையல் எரிவாயு விநியோகத்தைச் சீர்செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சிலிண்டர்களை வழங்கி வருகின்றன.
தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு, ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை மத்திய அரசு 25 நாட்களாக நீட்டித்துள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்த ‘அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்’ தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டர்களைப் பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்றாலோ கடும் அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வீடுகளுக்குத் தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதன்படி மும்பை, பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையிலும் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூருவில் உணவகங்கள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. சென்னையிலும் ஓட்டல் உரிமையாளர்கள் இந்தத் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மற்றும் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தென் மண்டல செயலாளர் செந்தில் கூறுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வீடுகளுக்குத் தேவையான சிலிண்டர்கள் இன்னும் மூன்று வாரங்களுக்குப் போதுமான அளவு இருப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். மத்திய அரசு விரைவில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
New Restriction Cylinder Booking Now You Can Book Only Once Every 25 Days