மும்பை லோக்கல் ரயிலில் கொடூரம்: மழை பெய்தபோது கதவை மூட மறுத்த விவகாரத்தில் பயணி கத்தியால் குத்திக் கொலை!
Murder Inside Mumbai Local Train Passenger Stabbed to Death Over Window Dispute
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் உயிர்நாடியாக விளங்கும் லோக்கல் ரயிலில், சக பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்படும் அளவிற்கு மிகக் கொடூரமான சம்பவமாக மாறியுள்ளது. இச்சம்பவம் மும்பை ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கடுமையான கனமழை பெய்தது. அப்போது, சர்ச்கேட் - நல்லசோபரா இடையே விரைவு லோக்கல் ரயில் (Fast Local Train) ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் (First Class) மயங்க் லோஹர் உள்ளிட்ட பல பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ரயில் கோர்கயான் மற்றும் கண்டிவாளி ரயில் நிலையங்களுக்கு இடையே வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
வாய்த்தகராறு முதல் கொடூரக் கொலை வரை
கனமழை பெய்து கொண்டிருந்ததால் ரயிலின் திறந்திருந்த கதவு வழியாக மழைத்துளிகள் பெட்டிக்குள் விழுந்து சக பயணிகளை நனைத்துள்ளன. இதன் காரணமாகப் பயணிகள், கதவின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் கதவை மூடுமாறு கேட்டுள்ளனர். ஆனால், அந்த நபர் கதவை மூட மறுத்ததால், அவருக்கும் மற்ற பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த சில பயணிகள் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபமடைந்த அந்த மர்ம நபர், திடீரெனத் தனது பையில் வைத்திருந்த கத்தியை எடுத்துப் பயணிகளை மிரட்டியுள்ளார். மற்ற பயணிகள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், எதிர்பாராத விதமாக மயங்க் லோஹரை அந்த நபர் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மயங்க் லோஹர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபர் கத்தியால் தாக்கியபோது, அச்சம் காரணமாகப் பயணிகள் யாரும் அவரைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை.
காவல்துறை விசாரணை தீவிரவடிவம்
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஓடும் ரயிலில் பயணியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய அந்த மர்ம நபரைப் பிடிப்பதற்காக, காவல்துறையினர் 7 தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ரயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மற்றும் சக பயணிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றவாளியைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
English Summary
Murder Inside Mumbai Local Train Passenger Stabbed to Death Over Window Dispute