'என்னை குறிவைத்தால் இந்த நாட்டையே உலுக்குவேன்; என்னை தேற்கடிக்க முடியாது'; பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மம்தா பானர்ஜி..!
Mamata Banerjee warns BJP that if they target me they will shake this country
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் நவம்பர் 04 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர்-ஐ செயல்படுத்தி பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடத் தயராகி வருகிறது. இதனை எஸ்.ஐ.அர் நிறுத்திவைக்க வேண்டும் எனவும் இண்டியா கூட்டணிக் கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன. குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எஸ்.ஐ.ஆர்-ஐ நிறுத்தி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், இந்த மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் பணிச்சுமைகள் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், பலர் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டதாகவும், அங்கு ஆட்சியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், இன்று மேற்குவங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்தக்கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ-க்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
வங்கதேச எல்லையில் உள்ள பர்கானா மாவட்டத்தில் நடந்த எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான பேரணியில், முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது: ''தேர்தல் ஆணையம் பாஜக ஆணையமாக செயல்பட்டு வருகிறது. நாங்கள், எஸ்.ஐ.ஆர் ஐ எதிர்க்க வில்லை. ஆனால், ஒருவருக்குக் கூட வாக்குரிமை பறிபோகக் கூடாது. தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பெயரைக் கூட நீக்க அனுமதி இல்லை. எஸ்.ஐ.ஆர் பணிகள் நடக்க மூன்று வருடங்கள் ஆகும். ஆனால், தற்போது வேகமாக நடந்து வருகின்றன. ஒருவரது வாக்கு நீக்கப்பட்டாலும் மத்திய அரசும் நீக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,'' பாஜக-வைப் பார்த்து எனக்கு எந்தப் பயமும் இல்லை. என்னைக் குறிவைத்தோ அல்லது தனது மக்களை குறிவைத்தோ பாஜக தாக்குதலை நடத்தினால், நான் இந்த நாட்டையே உலுக்குவேன் என்றும், எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், எத்தனை அரசு நிறுவனங்களைக் கொண்டு பாஜக சதி செய்தாலும், 2026-இல் பாஜகவால் தன்னை தோற்கடிக்க முடியாது எனவும் மம்தா பனார்ஜி சூளுரைத்துள்ளார்.
English Summary
Mamata Banerjee warns BJP that if they target me they will shake this country