பீஹார் தேர்தலில் படுதோல்வி: அரசியலையும் குடும்பத்தையும் விட்டு விலகும் லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா..!
Lalus daughter Rohini Acharya leaves politics and family
பீஹாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா அரசியலையும் தனது குடும்பத்தையும் விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக திகழ்ந்த கட்சி, இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மிக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன், அக்கட்சி வழிநடத்திய மகா கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. முன் எப்போதும் இல்லாத வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தொண்டர்கள் மிகவும் சோர்வடைந்துள்ள நிலையில்,அக்கட்சியின் முதல் குடும்பத்திலும் பிரச்சினை வெடித்துள்ளது. அதாவது, லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். RJD கட்சியில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்பட்டு வந்த இவர், இந்த தேர்தலின் போது அவர் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், கட்சியில் இருந்தும், தனது குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
"நான் அரசியலைவிட்டு வெளியேறுகிறேன். மேலும், எனது குடும்பத்தில் இருந்தும் விலகுகிறேன். சஞ்சய் யாதவும், ரமீஸும் இதைத்தான் என்னிடம் கேட்டார்கள். எல்லா பழிகளையும் நான் ஏற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Lalus daughter Rohini Acharya leaves politics and family