கடவுள், தலைவர்கள் பெயரில் பிரமாணம்: கேரளாவின் 21 உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவியேற்பு செல்லாது என உயர் நீதிமன்றம் அதிரடி!
Kerala HC Declares Oaths of 21 Local Body Members Invalid for Deviating from Format
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பாஜக கவுன்சிலர்கள் மற்றும் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் எடுத்த பதவியேற்பு உறுதிமொழி செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் அனைவரும் இன்னும் நான்கு வாரங்களுக்குள் சட்டப்பூர்வமாக மீண்டும் புதியதாகப் பதவியேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டங்களின்படி, மக்கள் பிரதிநிதிகள் 'கடவுளின் பெயரால்' அல்லது 'உளமாற' மட்டுமே பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, குறிப்பிட்ட கடவுள்களின் பெயர்களையோ அல்லது அரசியல் தலைவர்களின் பெயர்களையோ பயன்படுத்துவது சட்டப்படி அனுமதிக்கப்படாது என்று நீதியரசர் பி.வி.குன்ஹிகிருஷ்ணன் தனது தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த பதவியேற்பு விழாவின் போது, திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர்கள் ஸ்ரீ பத்மநாபசுவாமி, குருதேவா போன்ற குறிப்பிட்ட இந்து தெய்வங்களின் பெயர்களாலும், 'பாரத மாதா' மற்றும் தங்களின் அரசியல் இயக்க தியாகிகள் பெயராலும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதேபோல், பாலக்காடு மாவட்ட வடக்கஞ்சேரி பஞ்சாயத்து காங்கிரஸ் உறுப்பினர் சுனில், மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் பெயரால் பிரமாணம் செய்திருந்தார். இதை எதிர்த்து இடதுசாரி கவுன்சிலர் எஸ்.பி.தீபக் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில்தான் இந்த முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் என்பதால், பிரமாணத்தின் வடிவத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்தத் தவறான உறுதிமொழியின் காரணமாக அவர்களின் பதவி பறிபோகாது என்றும், மீண்டும் சட்டப்படி பதவியேற்க ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் நீதிபதி கூறினார். புதியதாகப் பதவியேற்கும் வரை அவர்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அதேநேரம் திருவனந்தபுரம் கவுன்சிலர்கள் இதுவரை மேற்கொண்ட நிர்வாக நடவடிக்கைகள் நகராட்சி சட்டப் பிரிவு 531-ன் கீழ் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Kerala HC Declares Oaths of 21 Local Body Members Invalid for Deviating from Format