GST சீர்திருத்தத்திற்கு அமெரிக்காவின் 50% வரி விதிப்புதான் காரணமா? - நிர்மலா சீதாராமன் விளக்கம்
Is the US 50 percentage tax imposition the reason for GST reform Nirmala Sitharaman explanation
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12% மற்றும் 28% ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். இந்த புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதிய நடைமுறையில், பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சில மின்சாதனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு விலை குறைவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த சீர்திருத்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் 50% வரி விதிப்பே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. அமெரிக்கா விதித்த வரி அழுத்தமே மத்திய அரசை விரைவில் மாற்றம் செய்யத் தூண்டியது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:"அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த 18 மாதங்களாக இந்த மாற்றம் குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், வணிகத்தை எளிதாக்கவும் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன." என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டை மத்திய நிதியமைச்சர் முழுமையாக மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
English Summary
Is the US 50 percentage tax imposition the reason for GST reform Nirmala Sitharaman explanation