ஒரு லட்சம் பங்குகள்; அதிக பெட்ரோல் பங்க் கொண்ட 03 வது நாடு இந்தியா..!
India is the 3rd country with the most petrol stations
இந்தியாவில் பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும், கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒரு லட்சத்து 266 பெட்ரோல் பங்குகள் உள்ளன. அதன்படி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக அதிக பெட்ரோல் பங்க் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் 90 சதவீதம் ஐஓசி, பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. தனியார் நிறுவனங்களை பொறுத்த வரை அதிகபட்சமாக, ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் ஆதரவு பெற்ற நயாரா எரிசக்தி நிறுவனம் நாடு முழுவதும் 6,921 பெட்ரோல் பங்குகளை வைத்துள்ளது. அத்தோடு, ரிலையன்ஸ் மற்றும் பிபி இணைந்து 2,115 பங்குகளையும், ஷெல் 346 பங்குகளையும் வைத்துள்ளது.

கடந்த 2015-இல் 50,451 பெட்ரோல் பங்குகள் இருந்த நிலையில், 2967 தனியாருக்கு சொந்தமானவை. அப்போது 5.9 சதவீதமாக இருந்த எண்ணிக்கை தற்போது 9.3 சதவீதமாக அதிகரித்ததாக எரிசக்தி துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசலை சில்லறை விற்பனைக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. 27 பங்குகள் மாத்திரம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. இந்தியாவை பொறுத்த வரை எரிபொருட்களின் விலை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், இந்த துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறைவாகவுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதன் மூலம் விலை நிர்ணயத்தின் பின்னணியில் அரசு உள்ளது. 2024-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி அமெரிக்காவில் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 1,96,643 ஆக உள்ளது. அடுத்த இடத்தில் சீனா உள்ளது. கடந்தாண்டு, 1,15,228 விற்பனை நிலையங்கள் செயல்பட்டன. இந்த பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
English Summary
India is the 3rd country with the most petrol stations