நாளை டெல்லி வரும் விளாடிமிர் புடின்; இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ராணுவ தளவாடங்களை பரஸ்பரம் பரிமாற்ற செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது..!
India and Russia sign military equipment exchange agreement
கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி இந்தியா மற்றும் ரஷ்யா இடையில் ராணுவ தளவாடங்களை பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகளாலும் கையெழுத்தானது.
குறித்த ஒப்பந்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில் அதன் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ அனுமதியை கோரி, கடந்த வாரம் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக நாளை (டிசம்பர் 04) இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
விளாடிமிர் புடின், உக்ரைன் போர் தொடங்கிய பிறகு மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். இந்தச் சூழலில், இந்தியாவுடனான ராணுவ தளவாடங்களை பரஸ்பரம் பரிமாற்றம் ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ‘ஸ்டேட் டுமா’ நேற்று (டிசம்பர் 03) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து அதனை சட்டமாக்கியுள்ளது.

இதனை அந்நாட்டு அதிபர் புதின், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாகவே ஒப்புதல் வழங்கியுள்ளமை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாட்டு ராணுவமும் தங்களது நாட்டின் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளியை எவ்வித தடையுமின்றிப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன், போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புதல், கூட்டுப் பயிற்சிகள், பேரிடர் கால மீட்புப் பணிகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் போன்ற நேரங்களில் இந்த வசதிகளை இரு நாடுகளும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதிலும் முயக்கியமாக, ஆர்க்டிக் பிராந்தியம் போன்ற மிக முக்கியமான பகுதிகளில் இந்தியக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தடையின்றிச் செயல்படவும், செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவியாக இருக்கும். இந்தத் தீர்மானம் குறித்து ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் வியாசஸ்லாவ் வோலோடின், 'இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்பதற்கான முக்கிய நடவடிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யா அதிபர் புதினின் வருகையின் போது எஸ்-500 வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் சுகோய்-57 போர் விமானம் வாங்குவது குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், குறித்த பரஸ்பர ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது இரு நாடுகளின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நட்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்கா முன்னெடுத்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்குச் சாதகமான அம்சங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த வரைவுத் திட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத பல நிபந்தனைகளைச் சேர்த்து, அமைதி முயற்சியை முழுமையாக முடக்கத் திட்டமிடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், மாஸ்கோ வந்திருந்த அமெரிக்கத் தூதுவர்களுடனான சந்திப்பிற்குப் பின்னர் அவர் பேசுகையில் ‘ஐரோப்பாவுடன் போரிட நாங்கள் திட்டமிடவில்லை; ஆனால் அவர்கள் விரும்பினால், இப்போதே போரிட நாங்கள் தயார். ஐரோப்பாவுடனான போர் மிக விரைவாக முடிந்துவிடும், அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்த அந்த கண்டத்தில் ஆட்களே இருக்க மாட்டார்கள்’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
India and Russia sign military equipment exchange agreement