பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: அன்னியச் செலாவணி இருப்பை அதிகரிக்கவும், சேமிக்கவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்...!
Importance economic growth Union Finance Minister Nirmala Sitharaman instructs to increase and save foreign exchange reserves
ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்ட போர் நடவடிக்கைகள் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உருவானதால் பல நாடுகள் எரிபொருள் அவசரநிலையை அறிவித்து, பெட்ரோல் மற்றும் டீசலை ரேஷன் முறையில் விநியோகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், பெட்ரோல், உரம் மற்றும் தங்கம் ஆகியவற்றின் இறக்குமதிக்காக இந்தியாவுக்கு அதிகளவில் அன்னியச் செலாவணி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்த சர்வதேச வர்த்தகங்களில் இந்திய ரூபாயை பயன்படுத்த முடியாததால் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அதேபோல், உலக சந்தையில் உரங்களின் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தங்கத்தின் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டுவருவதால், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. இந்த பொருளாதார அழுத்த சூழ்நிலையால், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் முக்கிய வேண்டுகோள்களை முன்வைத்திருந்தார்.
அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களையும் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், பிரதமரின் இந்த வேண்டுகோளை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். ரூபாய் மதிப்பு சரிந்து நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை நோக்கி நகர்ந்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், அன்னியச் செலாவணியை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோள் மிகவும் அவசியமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும் என மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி நிறுவன தின விழாவில் உரையாற்றிய அவர், “சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை சமாளிப்பதற்காகவே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “இதன் மூலம் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும், ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முடியும்” என்று நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Importance economic growth Union Finance Minister Nirmala Sitharaman instructs to increase and save foreign exchange reserves