'மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டுப் பெண்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'; பிரதமர் உருக்கம்..!
I apologize to the women of the nation for the failure to pass the bill states the Prime Minister in his address
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தொகுதி மறுவரை மசோதாவின்படி, தற்போதுள்ள 543 மக்களவை இடங்களை 50% அதிகரித்து, மொத்தம் 816 இடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டது. இதில், 33% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 273 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.
ஆனால், இந்த தொகுதி மறுவரையறை என்பது 2011-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மத்தியரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற கொள்கையின் படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் இந்த தொகுதி மறுவரையறையில் பாதிக்கப்படும் எனவும் வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தென்னிந்திய மாநிலங்களின் "அரசியல் செல்வாக்கு" குறைய வாய்ப்புள்ளது என கூறி பாஜக கூட்டணியில் ஆட்சியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தவிர ஏனைய தென்மாநில முதல்வர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
இந்நிலையில், நேற்றைய முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது 02 நாட்களாக விவாதம் நடைபெற்றது. நேற்று தொகுதி மறுவரையறை செய்வதற்கு, 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதா வெற்றிபெற 03-இல் 02 பங்கு அதாவது 352 எம்.பி-களின் ஆதரவு தேவை. இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 528 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
அதில், 298 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 230 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால், மசோதா நிறைவேறுவதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாக இந்திய அளவில் பேசுபொருளாகியிருந்த தொகுதி வரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்துள்ளது.இந்நிலையில், இன்று இரவு 08.30 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றுவார் எனக் கூறப்பட்டது.
அதன்படி, இன்று இன்று நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ''மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்த்தது எப்படி என்பதை நாடே பார்த்தது. மக்கள் அதிகாரத்திற்கு வரும் கனவை எதிர்க்கட்சிகள் தடுத்துள்ளன. மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டுப் பெண்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை தடுத்தி நிறுத்தியதாகவும், திமுக - காங்கிரசின் சுயநல அரசியலால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மசோதா தோல்வியடைந்த பிறகு அந்தக் கட்சிகள் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தமையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தாங்கள் அவமதிக்கப்பட்டதை நாட்டுப் பெண்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்றும், மகளிர் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக நான் இதைப் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெண்களின் கோபத்திடம் இருந்து எதிர்க்கட்சிகள் தப்ப முடியாது எனவும், பெண்கள் தற்போது திருப்பியடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. பாஜகவின் நேர்மையான முயற்சியை காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் கொலை செய்துவிட்டன என்று காட்டமாக கூறியுள்ளார்.
English Summary
I apologize to the women of the nation for the failure to pass the bill states the Prime Minister in his address