இனி ‘வெள்ளி’யும் தங்கம் தான்...! இறக்குமதி கட்டுப்பாட்டால் எகிறப்போகும் விலை...! - நிபுணர்கள் எச்சரிக்கை
From now silver gold Import restrictions cause prices soar Experts warn
இந்தியர்களின் வாழ்க்கை முறையிலும், பாரம்பரிய மரபுகளிலும் தங்கம் பிரிக்க முடியாத அங்கமாக திகழ்கிறது. குறிப்பாக தங்கம் ஒரு மங்களச் சின்னமாக கருதப்படுவதால், அதன் மீதான ஈர்ப்பு எப்போதும் குறையாததாகவே உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் விலை ஆண்டுதோறும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. விலை உயர்ந்தபோதிலும் தங்கம், வெள்ளி வாங்கும் மக்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இந்த சூழலில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இதில் 10 சதவீத அடிப்படை சுங்கவரி மற்றும் 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி உயர்வு கடந்த 13-ந்தேதி முதல் அமலுக்கு வந்ததால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் உடனடி தாக்கம் உருவாகியுள்ளது.தற்போது நிலவி வரும் அமெரிக்கா–ஈரான் மோதலும், ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலும் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிகளவு டாலர்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்கும், தங்கத் தேவைகளுக்கும் பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் அன்னிய செலாவணி கையிருப்பில் வேகமான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பாதிப்பை சமன்படுத்தும் நோக்கில் அத்தியாவசியமற்ற இறக்குமதியாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கையாகவே இந்த வரி உயர்வு பார்க்கப்படுகிறது என்று பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வெள்ளி இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கிய சில நாட்களிலேயே குறிப்பிட்ட வகை வெள்ளிக்கட்டிகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 99.9 சதவீத தூய்மையான வெள்ளிக்கட்டிகள் இதுவரை தடையற்ற இறக்குமதி பிரிவில் இடம்பெற்றிருந்தன.
தற்போது அவை கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனுடன் குறிப்பிடத்தக்க பிற வெள்ளி வகைகளும் கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த புதிய மாற்றத்தின் காரணமாக வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி செய்ய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி அல்லது உரிமம் கட்டாயமாக பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உள்நாட்டு தேவையை தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே இந்த அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இந்த கட்டுப்பாடுகள் காரணமாக உள்நாட்டில் வெள்ளி விலை மேலும் உயரக்கூடும் என்றும், நகைத் தொழில் மற்றும் மின்னணு உற்பத்தித் துறைகளில் வெள்ளி தட்டுப்பாடு உருவாகும் அபாயம் இருப்பதாக வர்த்தக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தங்கத்தை விட வெள்ளி இறக்குமதிதான் சமீப காலங்களில் அதிகளவில் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் வெள்ளி இறக்குமதி மதிப்பு இரண்டரை மடங்கு உயர்ந்து சுமார் 12.1 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. அளவின் அடிப்படையில் பார்க்கும்போது 42 சதவீத உயர்வுடன் 7,335 டன்களாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் இதே வேகமான வளர்ச்சி தொடர்ந்ததால், மத்திய அரசு இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
From now silver gold Import restrictions cause prices soar Experts warn