கட்டாக் கலவரம் தீவிரம்! 6 பேர் கைது... நூற்றுக்கணக்கானோர் விசாரணையில்...! நடந்தது என்ன...?
Cuttack riots intensify 6 people arrested Hundreds under investigation What happened
ஒடிசா மாநிலத்தின் தெபிகரா பகுதியில் துர்கா சிலை கரைப்பை மையமாகக் கொண்டு ஏற்பட்ட கலவரம், தற்போது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 3-ந்தேதி நள்ளிரவில், விஷ்வ இந்து பரிஷத் (VHP) அமைப்பினர் துர்கா சிலையை கரைக்க நதி படித்துறையில் ஊர்வலமாக சென்றனர்.
அந்த ஊர்வலம் தார்கா பஜார் வழியாகச் செல்லும் போது, அதிக ஒலியுடன் பாடல்கள் ஒலித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததில், வாக்குவாதம் வன்முறையாக மாறியது. மேலும், துர்கா ஊர்வலக்காரர்கள் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டதில் பரபரப்பு நிலவியது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டனர்.இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் விதித்த தடை உத்தரவை மீறி, நேற்று மாலை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தியுள்ளனர். வித்யாதர்பூர் பகுதியில் தொடங்கிய இந்த பேரணி, தார்கா பஜார் உள்ளிட்ட கலவரம் நடைபெற்ற பகுதிகளை கடந்து, நகரின் சி.டி.ஏ செக்டர்–11ல் முடிவடைந்தது.
இதில் காவலர்கள் பேரணியை தடுத்து நிறுத்த முயன்றபோது, மோதல் வெடித்தது. அங்கு சிலர் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் கட்டாக் நகரம் முழுவதும் பதற்றம் பரவியது.இந்த நிலைமை மோசமடைந்ததால், ஒடிசா அரசு 13 காவல் நிலைய எல்லைகளில் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. தார்கா பஜார், மங்களாபாக், பூரிகாட், லால் பாக், ஜகத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
மேலும், பொய்யான செய்தி பரவுவதைத் தடுக்க, கட்டாக் மாநகராட்சி மற்றும் வளா்ச்சி ஆணையம் உட்பட 42 மவுஜா மண்டலங்களில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரை இணைய சேவை முடக்கப்பட்டது.இந்த வன்முறைக்கு எதிராக விஷ்வ இந்து பரிஷத் இன்று 12 மணி நேர கடை அடைப்பை அறிவித்துள்ளது.
இதையடுத்து நகரம் முழுவதும் கடைகள் மூடப்பட்டு, காவலர்கள் மற்றும் விரைவு நடவடிக்கை படையினர் பலத்த பாதுகாப்பில் களமிறங்கியுள்ளனர்.அங்கு அமைதி நிலவ வேண்டும் என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
English Summary
Cuttack riots intensify 6 people arrested Hundreds under investigation What happened