தொகுதி பங்கீட்டில் இழுபறியால் கூட்டணி கட்சி விலகல்: இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு..! 
                                    
                                    
                                   Confusion within the India alliance as coalition parties withdraw due to a dispute over seat sharing
 
                                 
                               
                                
                                      
                                            பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக முடித்து, பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட குழப்பம் காரணமாக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை சந்தித்துள்ளது. 
பீகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல், வரும் நவம்பர் 06 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதோடு, வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த 12-ஆம் தேதியே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தது.

இதன்படி, பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளிலும், லோக் ஜன்சக்தி (ராம் விலாஸ்) 29 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலா 06 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆனால், இதற்கு நேர்மாறாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் முதல் கட்ட வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 17-ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில், 16-ஆம் தேதி இரவு வரை தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது.
கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் கருத்து வேறுபாட்டால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி நேற்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. அக்கட்சி, கூட்டணிக்குள் நிலவும் உள்கட்சி பூசல்கள் காரணமாக 06 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியுள்ளது. இது கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், தனது புதிய கட்சியின் சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடுவதும், அரசியல் விமர்சகர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதும் இந்தத் தேர்தலை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.

அத்துடன், லோக் ஜன்சக்தி கட்சியின் வேட்பாளர் நடிகை ஒருவரின் மனு தொழில்நுட்பக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வேட்புமனுத் தாக்கலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 48 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, நேற்று மேலும் 05 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், காங்கிரஸ் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, லால்கஞ்ச், வைஷாலி, பச்வாரா, ரோசெரா மற்றும் பிஹார்ஷெரீப் போன்ற பல தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்களே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனை அடுத்து, மெகா கூட்டணியில் நிலவும் குழப்ப நிலையை பா.ஜ.க சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு விமர்சித்துள்ளது.
ஏற்கனவே, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது தோழமைக் கட்சிகளே நேருக்கு நேர் மோதுவது எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Confusion within the India alliance as coalition parties withdraw due to a dispute over seat sharing