கடனை கட்ட முடியாததால் தற்கொலை நாடகம்; ஆற்றில் தேடப்பட்ட பாஜக பிரமுகர் மகன், மகாராஷ்டிராவில் கைது..!
BJP leader son arrested in Maharashtra for allegedly committing suicide over debt
பாஜக பிரமுகரின் மகன் ஒருவர், ஒன்றரை கோடி ரூபாய் கடனுக்காக தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிராவில் உயிருடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் மகேஷ் சோனியின் மகன் விஷால் சோனி. கடந்த 05-ஆம் தேதி இவருக்கு சொந்தமான கார் ஒன்று காளிசிந்து ஆற்றில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டது. அதில் விஷால் இல்லை. இதனால் அவர் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என காவல்துறை கருதியுள்ளனர். பின்னர், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் அடங்கிய மூன்று தனிக்குழுக்கள் கடந்த 10 நாட்களாக ஆற்றில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு தீவிரமாக தேடி வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், போலீசார் விஷாலின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அவர் மகாராஷ்டிராவில் உயிருடன் பதுங்கியிருப்பது தெரியவந்த நிலையில், மகாராஷ்டிரா காவல்துறையின் உதவியுடன் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் வைத்து விஷாலை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பின்னர் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், தனக்கு சொந்தமான வாகனங்கள் மூலம் ஏற்பட்ட ரூ.1.40 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவதற்காக, இறப்புச் சான்றிதழ் பெற்றால் வங்கிக் கடன் தள்ளுபடியாகும் என்று நம்பி தற்கொலை நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அத்துடன், விஷால் தனது கார் ஆற்றில் தள்ளிவிட்டு, ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும், காவல்துறையினர் தன்னை நெருங்குவதை அறிந்ததும், தன்னை யாரோ கடத்தி விட்டதாக நாடகமாட முயன்றதும் அம்பலமாகியுள்ளது. ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடுவதை தண்டிப்பதற்கு நேரடியான சட்டப்பிரிவுகள் இல்லாததால், போலீசார் அவரைக் கண்டித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP leader son arrested in Maharashtra for allegedly committing suicide over debt