திருப்பதி திருமலையில் சைனீஸ் உணவுகள் விற்பனை செய்ய தடை விதிப்பு: தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு..!
Ban on the sale of Chinese food in Tirupati Tirumala
ஆந்திரா பிரதேசம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அங்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் மற்றும் இதர கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது.
இந்நிலையில் திருமலை முழுவதும் உணவுமுறைகளில் கட்டுப்பாடு கொண்டுவர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக தேவஸ்தானம் வழங்கும் அன்ன பிரசாதம் தவிர, தனியார் ஓட்டல்களில் விற்கப்படும் சைனீஸ் உணவுகளை விற்க தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று திருமலையில் தனியார் ஓட்டல்கள் மற்றும் துரித உணவக உரிமையாளர்களுடன் கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய சவுத்ரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

அப்போது வெங்கய்ய சவுத்ரி பேசுகையில், ‘திருமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தேவஸ்தானம் வழங்கக்கூடிய அன்னபிரசாதம் சாப்பிடுகின்றனர். ஆனால் சிலர், தனியார் ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்களில் சாப்பிடுகின்றனர். அவ்வாறு சாப்பிடக்கூடிய பக்தர்களுக்கும் சம்பிரதாய முறைப்படி தயார் செய்யக்கூடிய உணவுகள் மட்டுமே வழங்கவேண்டும். இனி வருங்காலங்களில் சைனீஸ் உணவு பொருட்களை தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது. இதற்கு திருமலை முழுவதும் தடைவிதிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள், இனி, படிப்படியாக சைனீஸ் உணவு வகைகளை குறைத்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளனர். மேலும், பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடும் சைனீஸ் உணவு முறைக்கு கட்டுப்பாடு விதிப்பது ஏற்புடையதல்ல என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Ban on the sale of Chinese food in Tirupati Tirumala