மகாராஷ்டிரா போலீசாரால் பெண் மருத்துவர் தொடர் பாலியல் வன்கொடுமை! உள்ளங்கையில் சிக்கிய ஆதாரம்!
assault police maharastra Female doctor suicide note
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு பெண் மருத்துவர் நேற்று இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்தில் அவர் உள்ளங்கையில் எழுதப்பட்டிருந்த குறிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “எனது மரணத்திற்குக் காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். கடந்த ஐந்து மாதங்களாக என்னை உடல், மன ரீதியாக துன்புறுத்தி வந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் புதியவை அல்ல. ஜூன் 19ஆம் தேதி, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த மருத்துவர் ஃபல்டான் DSPக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ஃபல்டான் ஊரக காவல்துறையில் பணிபுரியும் கோபால் பத்னே, துணைக் கோட்ட ஆய்வாளர் பாட்டீல், உதவி ஆய்வாளர் லாட்புத்ரே ஆகியோர் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகக் கூறி, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.
அந்த கடிதத்தில், “நான் கடுமையான மனஅழுத்தத்தில் இருக்கிறேன். இந்த அதிகாரிகள்மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நேற்று இரவு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காவல்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
அம்மாநில காங்கிரஸ் தலைவர் விஜய் நாம்ராவ் வடேட்டிவார் தனது எக்ஸ் பதிவில், “பாதுகாக்க வேண்டிய காவல்துறையே பெண்களைச் சுரண்டினால், நீதி எங்கே கிடைக்கும்? புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின் பேரில் கோபால் பத்னே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
assault police maharastra Female doctor suicide note