கரையை கடந்தது மோன்தா புயல்!
Andhra Pradesh montha Cyclone Heavy Rain
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் தீவிர புயலாக மாறி, இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று மாலை 7.30 மணியளவில் புயல் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கத் தொடங்கியது. பின்னர் நள்ளிரவில் முழுமையாக நிலப்பரப்பைத் தாண்டி சென்றது.
புயலின் தாக்கத்தால் ஆந்திராவின் பல கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோனசீமா பகுதியில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் பயணித்த ஆட்டோ மீது கனமழையால் மரம் முறிந்து விழுந்ததில், அந்த பெண் உயிரிழந்தார். மேலும், ஆட்டோ ஓட்டுனரும் ஒரு சிறுவனும் கடுமையாக காயமடைந்தனர்.
அல்லூரி மாவட்டத்தில் வெள்ளநீரில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர். இதேசமயம், ஸ்ரீகாகுளம் பகுதியில் சிவன் சிலை வெள்ளத்தில் பாதியாக மூழ்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
பல இடங்களில் பலத்த காற்றால் மரங்கள் சாய்ந்தன. ஆபத்தான கடலோர பகுதிகளில் இருந்து 76,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதே நேரத்தில், மோன்தா புயல் காரணமாக ஆந்திர மாநிலத்தின் 12 மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகள் மீட்பு பணிகளை தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Andhra Pradesh montha Cyclone Heavy Rain