72 வயது முதிவரை ஏமாற்றி 04 ஆண்டுகளாக மோசடி; மும்பை பங்குச் சந்தையில் ரூ.35 கோடி இழந்த சோகம்..!
A 72 years old man lost Rs 35 crores in a scam on the Mumbai Stock Exchange
மஹாராஷ்டிராவின் மதுங்கா மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் 72 வயதான பாரத் ஹரக்சந்த் ஷா. இவரும், அவரது மனைவியும் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விடுதி ஒன்றை நடத்தி வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடும் இந்த விடுதியும் பாரத் ஹரக்சந்த் ஷாவின் பரம்பரை சொத்து ஆகும்.
தம்பதிக்கு பங்குச்சந்தை பற்றி எந்த புரிதலும் இல்லாத காரணத்தினால் அதில் அவர்கள் ஈடுபடவும் இல்லை. ஆனால், கடந்த 2020-ஆம் ஆண்டு நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக அவரும், அவரது மனைவியும் இணைந்து குளோப் கேபிடல் மார்க்கெட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து டீமேட் கணக்கை துவக்கி, அதில் பாரம்பரிய சொத்தின் பங்குகளை அந்த கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.
தொடக்கத்தில் அவர்களுக்கு அனைத்தும் நன்றாக சென்றுள்ளது. பின்னர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஷாவை தொடர்பு கொண்டு பேசியபோது பல உறுதிமொழிகளை அளித்ததுடன், இனி கூடுதல் முதலீடு செய்ய தேவையில்லை என்று கூறியதால், அவரும் நம்பிக்கையுடன் இருந்துள்ளனர்.

பின்னர் அவருக்கு உதவுவதற்கு என தனியாக அக்சய் பாரியா மற்றும் கரன் சிரோயா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதன் பிறகு இருவரும் ஷா மற்றும் அவரின் மனைவியின் கணக்குகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அவர்களும், தினமும் ஷாவை தொடர்பு கொண்டு பேசியதுடன், அடிக்கடி வீட்டுக்கு வந்தும் இமெயிலும் அனுப்பி வந்துள்ளனர். அவர்களை நம்பிய ஷாவும் அனைத்து அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளார். அவர்கள் கூறிய லிங்க்குகளில் எல்லாம் ஓடிபி கொடுத்ததுடன், அனைத்து இமெயில் மற்றும் எஸ்எம்எஸ்க்கு பதில் அளிக்கத் தொடங்கியுள்ளார்.
மேலும், கடந்த 2020 மார்ச் முதல் 2024 ஜூன் வரையில் அவருக்கு அனுப்பபட்ட ஆண்டறிக்கையில் முதலீட்டில் லாபம் வந்ததாக காட்டப்பட்டது. இதனால், ஷாவுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.
ஆனால் 2024 ஜூலை மாதம் குளோப் கேப்பிடல் ரிஸ்க் நிர்வாகத்துறையிடம் இருந்து, பாரத் ஹரக்சந்த் ஷாவுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், உங்களின் கணக்கில் 35 கோடி ரூபாய் கடன் உள்ளது. அதனை உடனடியாக செலுத்த வேண்டும். அல்லது பங்குகள் அனைத்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தனர்.

இதனால், ஷா அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் குறித்த நிறுவனத்துக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது தான், அவரது கணக்கில் இருந்து முறையற்ற முறையில் வர்த்தகம் நடந்ததும், கோடிக்கணக்கான பங்குகள் தவறான முறையில் விற்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இழப்பு ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தில் இருந்து உண்மையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்த போதுதான் , அவருக்கு அனுப்பப்பட்ட அனைத்து தகவல்களும் பொய் என தெரிய வந்துள்ளது. மோசடி தொடர்பாக நிறுவனத்துக்கு தேசிய பங்குச்சந்தையிடம் இருந்து நோட்டீஸ் வந்ததும், அதற்கு பாரத் ஹரக்சந்த் ஷா பெயரில் அந்த நிறுவனமே பதில் அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தனது எஞ்சிய பங்குகளை விற்று 35 கோடி ரூபாய் கடனை பாரத் ஹரக்சந்த் ஷா அடைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது கொடுத்துள்ள புகாரில், இந்த வழக்கை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
English Summary
A 72 years old man lost Rs 35 crores in a scam on the Mumbai Stock Exchange