குடிபோதையில் வீட்டுக்கு வந்த 04 ஆம் வகுப்பு மாணவன்; அரசு பள்ளி கழிவறையில் 204 லிட்டர் மது பறிமுதல்; பெற்றோர் அதிர்ச்சி..!
204 Liters of Liquor Seized from Government School Restroom in Bihar
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் சட்டவிரோதமாக அம்மாநிலத்தில் அடிக்கடி தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த வாரம் பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 09 பேர் உயிரிழந்ததோடு, 06 பேர் கண்பார்வை இழந்துள்ளதோடு, 10க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள சிஸ்வா பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியின் பின்புறம் பயன்படுத்தப்படாத கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பள்ளியில் படித்து வந்த 04-ஆம் வகுப்பு மாணவன், கடந்த திங்கள்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு குடிபோதையில் சென்றுள்ளான். அப்போது மாணவனின் நடை மற்றும் பேச்சில் மாற்றம் இருந்ததை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவனை கண்டித்து கேட்டதில், பள்ளி கழிவறையில் இருந்த மதுவை அருந்தியதை ஒப்பு கொண்டான். அளவுக்கு அதிகமான போதையால் மாணவனின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் உடல்நிலை சீராகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தலைமை ஆசிரியர் சோதனை நடத்தியுள்ளார். அப்போது அங்கு 23 அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் வெளிநாட்டு மது கண்டெடுக்கப்பட்டுள்ளது. பச்வாரா போலீசார் மதுவை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
204 Liters of Liquor Seized from Government School Restroom in Bihar