புதுச்சேரியில் 89% வாக்குப்பதிவு; ஆளுங்கட்சிக்கு எதிரான கோபமா? விஜய்யின் வரவு ஏற்படுத்திய மாற்றமா?
Unprecedented voter turnout in Puducherry
புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அதன்படி, புதுச்சேரியில் காலை 07 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஆறுமணிவரை நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கான தேர்தலில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் 9,50,639 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 89% பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இது, அம்மாநிலத்தில் இதுவரைக்கும் வரலாறு காணாத அளவு பதிவான அதிகபட்ச வாக்குபதிவாகும்.
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 05 ஆண்டுகால ஆட்சியில், மின்சாரத் தனியார்மயமாக்கல் எதிர்ப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் மாநில அந்தஸ்து கோரிக்கை போன்ற விவகாரங்கள் வலுவான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்காளர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு பதிவு செய்ய வழக்கத்தை விட அதிக உத்வேகத்துடன் வாக்குச்சாவடிக்கு வருவது வழக்கமாகும். இதுவே இன்றைய 89% பதிவிற்கு முதன்மைக் காரணமாக இருந்தால் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கலாம்.
அதன்படி, கடந்த கால புதுச்சேரி தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, கடந்த ஐந்து தேர்தல்களில் நான்கு முறை ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பது ஒரு முக்கியமான பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2006 மற்றும் 2011 தேர்தல்களில் பதிவான அதிகப்படியான வாக்குப்பதிவு நேரடியாக ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது. இருப்பினும் , 2016 , 2021 தேர்தல்களில் முறையே 83.6% மற்றும் 81.7% என வாக்குப்பதிவு சற்றே குறைந்திருந்தது. ஆனாலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
இந்த முறை நடிகர் விஜயின் தவெக புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான புதிய மற்றும் இளைஞர்களின் வாக்குகளைத் திரட்டியிருக்கலாம். இதன் காரணமாக வாக்கு சதவிகிதம் அதிகரித்து இருந்தால் புதுச்சேரியில் மும்முனைப் போட்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
அடுத்ததாக, தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வும், சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறையும் ஒரு மறைமுகக் காரணமாகும். ஏனெனில், தேர்தல்களில் தகுதியான அனைத்து வாக்காளர்களின் பங்கேற்பை உறுதி செய்யவும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்கவும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. புதுச்சேரியில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அத்துடன், 42 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அதாவது, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறையும்போது, பதிவாகும் வாக்கு விகிதம் இயல்பாகவே அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, 2025 எஸ்ஐஆர்-க்கு பின்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்கு சதவிகிதம் அதிகரித்து இருந்தது. குறிப்பாக பீகார் 2020 தேர்தலில் 57.29% ஆக இருந்த வாக்குப்பதிவு, எஸ்ஐஆர்-க்கு பிந்தைய 2025 தேர்தலில் 66.91% ஆக உயர்ந்தது. 75 ஆண்டுகால பீகார் அரசியலில், முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒரு வரலாற்றுச் சாதனையாக அதை பார்க்கலாம்.
ஆனால், புதுச்சேரியில் இந்த வரலாறு காணாத 89% வாக்குப்பதிவு என்பது ஆளுங்கட்சிக்கு எதிரான கோபமா? அல்லது விஜய் போன்ற புதிய வரவுகள் ஏற்படுத்திய மாற்றமா? என்பதை மே மாதம் 04 ஆம் தேதி மாலை தெரியவரும்.
English Summary
Unprecedented voter turnout in Puducherry