உடலுக்கு தேவையான சத்துக்களை வாரி வழங்கும் சுறாபுட்டு செய்வது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


சுறா புட்டு பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், பெரியவர் அனைவர்க்கும் சிறந்த உணவு. அதிக புரதசத்து மற்றும் கொழுப்புச் சத்து மற்றும் ஒமேகா 3 நிரம்பிய ஒரு உணவு.

சுறாவில் இரண்டு வகை உண்டு பால் சுறா, மாட்டு சுறா. பால் சுறா மட்டுமே புட்டு மற்றும் குழம்புக்கு சுவையாக இருக்கும். இது வெண்மை நிறத்தில் இருக்கும். 
பால் சுறா ஒரு கிலோவிற்கு குறைவாக உள்ள மீன்களே புட்டுக்கு நன்றாக இருக்கும். அதற்கு மேல் உள்ளவை குழம்புக்கு மட்டுமே சுவை கொடுக்கும். மாட்டு சுறா அதிக வீச்சம் உள்ளதுடன் சுவை குறைவாகவே இருக்கும்.

சுறா புட்டு செய்யத் தேவையான பொருட்கள்:

பால் சுறா - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - முக்கால் கிலோ பொடியாக நறுக்கியது.
பச்சை மிளகாய் - பத்து பொடியாக நறுக்கியது.
மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து


இஞ்சி - ஒரு பெரிய துண்டு பொடியாக நறுக்கியது.
பூண்டு பெரிய பல் - முப்பது பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - ஒரு மேசைக் கரண்டி
கடுகு, சீரகம் - தாளிக்க
கொத்துமல்லி தழை - சிறிது.
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

முதலில் சுறாவை துண்டுகளாக்கி மஞ்சள் தூள் சிறிது சேர்த்து நன்கு கழுவவும். பின்னர் அதில் சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் வேக விடவும்.

சில மீன் கடைகளில் தோல் உரித்து தருவர். ஆனால் சில இடங்களில் உரிக்க மாட்டார்கள். இதன் தோல் உரிப்பது சிரமம். அதனால் வேக வைத்து விட்டு நீங்கள் கையால் உரித்தால் தோல் வந்து விடும்.

பின்னர் இதை நன்கு உதிர்த்து விடவும். முட்கள் soft ஆக இருக்கும். அதனால் அதை உபயோகப்படுத்தவும்.ஒரு கனமான இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் இதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இது நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் இதில் உதிர்த்து வைத்த சுராவை சேர்த்து மீதம் உள்ள உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

இது நன்றாக ஒரு பதினைந்து நிமிடம் சிம்மில் வைத்து வதக்கவும். இது சுருண்டு வரும். அப்போது உப்பு காரம் பார்த்து விட்டு சிறிது மிளகு தூள் சேர்க்கவும்.பின்னர் இதை வேறு பாத்திரத்துக்கு மாற்றி சிறிது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.நன்றாக சமைத்த சுறாவில் வீச்சம் இருக்காது.

குறிப்பு:

இந்த உணவிற்கு வெங்காயம், பூண்டு அதிகமாகவே சேர்க்க வேண்டும். அது தான் சுவைக் கொடுக்கும்.இதில் பச்சை மிளகாய், மிளகுத் தூள் காரம் மட்டுமே. கண்டிப்பாக அதிக பச்சைமிளகாய் தேவைப்படும் ஆறிலிருந்து பத்து தேவைக்கேற்ப உபயோகிக்கவும்.

English Summary

how to make sura puttu in home


கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
Seithipunal