ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு!
TET Exam Date
தமிழகத்தில் நடைபெறவுள்ள இவ்வாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கானது டெட் தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கானது டெட் தாள்-2 என இரு வகைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாண்டு டெட் தேர்வு நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆகஸ்ட் 11 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தேதிகள் கிறிஸ்தவ மக்களின் கல்லறைத் திருநாளோடு பொருந்தியதால் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு, டெட் தாள்-1 நவம்பர் 15-ஆம் தேதி, தாள்-2 நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என திருத்திய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (செப்டம்பர் 8) மாலை 5 மணிக்கு முடிவடைய இருந்தது. ஆனால் கடைசி நாளில் பெருமளவில் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் பதிவு செய்ததால் இணையதளம் சீர்குலைந்தது. இதனை முன்னிட்டு, விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு, செப்டம்பர் 10 மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.