நாணயத்தின் இரு பக்கங்கள் போல தான் பொங்கலும், ஜல்லிக்கட்டும்.! தமிழரின் வீர விளையாட்டு.! 
                                    
                                    
                                   jallikkattu special 
 
                                 
                               
                                
                                      
                                            ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். இவ்விளையாட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
நாணயத்தின் இரு பக்கங்கள் போல தான் பொங்கலும், ஜல்லிக்கட்டும். 200 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமாக தொடர்ந்து இந்த வீர விளையாட்டில் மாடு பிடித்தல், ஏறுதழுவல், ஏறுகோள், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு என்ற சிறப்பு பெயர்களுடன் காளையோடு சேர்ந்து மனிதர்கள் விளையாடும் வீரவிளையாட்டுதான் ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டு சிறப்பு :
ஜல்லிக்கட்டு என்றால் நம் மனதிற்கு முதலில் தோன்றுவது காளை மாடுதான். அந்த ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதே ஒரு தனிக்கலைதான். அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணத் தருகிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரியக் கலை. ஜல்லிக்கட்டில் சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக்கூடியவை. 
ஆனால், சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கிவந்து பாயும்போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால், பிடிபோட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். இப்படி காளை மாடுஃஜல்லிக்கட்டு மாடு என்பது ஒரு குடும்பத்தின் அடையாளம்.
ஜல்லிக்கட்டில் இரண்டுவிதம் உள்ளது. ஒன்று வாடிவாசல் கொண்டது. அதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் ஒரு போர்க்களம் போலிருக்கும். 
வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டின்போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடம் ஆகும். இவ்வாசலைத் தாண்டும் முன் காளைகளின் மூக்கணாங்கயிறு உள்ளிட்ட அனைத்துப் பிணைப்புகளையும் அறுத்து விடுவர்.
மாட்டுப் பொங்கலன்று கால்நடைகளைக் குளிப்பாட்டி நல்ல உணவு கொடுத்து இரவு ஒரு திடலில் கொண்டு வந்து கட்டுவார்கள். அங்கு ஒரு மரத்தின் கீழே இறைவனின் உருவத்தைப் பிடித்துவைத்து பொங்கலிடுவார்கள். பின் பொங்கலை குவித்து பழங்களைச் சேர்த்து பிசைந்து மாடுகளுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டுவார்கள். மறுநாள் அதிகாலை மாடுகளின் கழுத்தில் தேங்காய், பழங்களைக் கட்டி அவிழ்த்துவிடுவார்கள். 
முறைப்பெண்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்க, இளைஞர்கள் மாடுகளைத் துரத்தி அந்த தேங்காயைப் பறிப்பார்கள். இதுவே சேலம், கோவை, காரைக்குடி பகுதிகளில் மஞ்சு விரட்டு அல்லது வெளிவிரட்டு என்ற பெயரில் நடக்கிறது.
மாட்டை பிடிப்பதில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா?
கொம்பைப் பிடித்து அழுத்துதல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையின் மார்பில் தொங்குதல், கழுத்தைத் திருகல், திமில் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவாக கையாளும் உத்திகள்.
மாடு வாடிவாசலை விட்டு வெளியே வந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் கோட்டை கடப்பதற்குள் நீங்கள் மாட்டினை தழுவி சென்றால் நீங்கள் வீரர்... பரிசுப் பொருள் உண்டு..! இப்படி மாடு பிடிக்கும்போது, சிறு அளவிலோ அல்லது பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழக்கம்.