விஷாலை பார்த்து யோகிபாபு கொடுத்த ரியாக்ஷன்… விஜய் போன் செய்து கலாய்த்த சுவாரஸ்ய சம்பவம்!
Yogi Babu reaction to Vishal An interesting incident where Vijay called and played a prank
கோலிவுட் நகைச்சுவை நடிகர்களில் இன்று உச்சத்தில் இருப்பவர் யோகிபாபு. காமெடி நடிகராக மட்டுமல்லாமல், கதையின் நாயகனாகவும் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த யோகிபாபு, இதுவரை 300 படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனை. சமீபத்தில் அவரது 300-ஆவது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
சிறிய கதாபாத்திரங்களில் இருந்து தொடங்கி, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி வேகமாக முன்னேறியவர் யோகிபாபு. ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த அவர், “யோகிபாபு இருந்தால் காமெடி ஒர்க் அவுட் ஆகும்” என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் உருவாக்கினார். அதுவே அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
காமெடி நடிகராக நிலைபெற்ற யோகிபாபு, கோலமாவு கோகிலா படத்தில் கதையின் நாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த படம் மெகா ப்ளாக்பஸ்டராக மாறியது. தொடர்ந்து மண்டேலா படத்தில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடித்த யோகிபாபு, தேசிய விருது பெற்ற படத்தின் நாயகனாகவும் கவனம் ஈர்த்தார். லீடு ரோல்களில் தொடர்ந்து நடித்தாலும், இந்த இரண்டு படங்கள் கொடுத்த அளவுக்கு மற்ற படங்கள் பெரிய வெற்றியைத் தரவில்லை என்பது உண்மை.
பொதுவாக ஹீரோவாக மாறிய பிறகு பலர் காமெடி கதாபாத்திரங்களை தவிர்த்து விடுவார்கள். சந்தானம், சூரி போன்றவர்கள் அந்தப் பாதையில் சென்றாலும், யோகிபாபு மட்டும் அதிலிருந்து விலகினார். ஒரு பக்கம் நாயகனாக நடித்தாலும், மறுபக்கம் தலைவன் தலைவி, ஜெயிலர் 2 போன்ற படங்களில் காமெடி ரோல்களையும் ஏற்று நடித்துவருகிறார்.
யோகிபாபுவின் நகைச்சுவை ஆன்-ஸ்கிரீனில் மட்டுமல்ல, ஆஃப்-ஸ்கிரீனிலும் ரசிகர்களை சிரிக்க வைப்பது வழக்கம். அதுபோன்றே, விஷாலுடன் ஒரு படத்தில் நடித்தபோது நடந்த ஒரு சம்பவம் பெரிய மீம் மெட்டீரியலாக மாறியது. சாப்பிடும் போது விஷால் கடவுளை பார்த்து வணங்க, அருகில் அமர்ந்திருந்த யோகிபாபு கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை வைத்து பலரும் கலாய்த்தனர்.
இந்த விஷயத்தை சமீபத்திய ஒரு மேடை நிகழ்ச்சியில் யோகிபாபு சுவாரஸ்யமாக பகிர்ந்தார்.“இந்த வீடியோவை பார்த்துவிட்டு விஜய் அண்ணன் எனக்கு போன் செய்தார். ‘ஏன் டா, அந்த மனுஷனே இப்போதான் மேலே வந்திருக்கிறார்… நீ ஒரு ரியாக்ஷன் கொடுத்து காலி பண்ணிட்டியே’ன்னு கலாய்த்தார். நான் ‘இல்ல அண்ணா, சும்மாதான்’ன்னு சொன்னேன். அதுக்கு அவர் ‘டேய் டேய், உன்னைப் பத்தி எனக்கு தெரியும்… எப்போ எப்படி ரியாக்ஷன் கொடுப்பனும்னு’னு சொன்னார்” என்று யோகிபாபு கூறினார்.
இந்த சம்பவம், யோகிபாபுவின் இயல்பான நகைச்சுவையும், விஜயுடன் உள்ள நட்பும் ரசிகர்களிடையே மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Yogi Babu reaction to Vishal An interesting incident where Vijay called and played a prank