நகை கடன் புதிய விதிமுறையால் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது தடுக்கப்படும் - பாஜக நாராயணன் புது விளக்கம்! - Seithipunal
Seithipunal



தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள அறிக்கையில், "நகை கடன் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது என்றும் இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பல்வேறு விதமான கருத்துகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிற நிலையில், தங்கத்தை பதுக்கி, அதை அடகு வைத்து கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கணக்கில் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதை கண்டறிந்தது ரிசர்வ் வங்கி.

குறிப்பாக, தங்க நகை அடமானக் கடன்களில் பல்வேறு விதிமுறை மீறல்கள், சட்ட மீறல்கள் உள்ளிட்ட ஒழுங்கற்ற தன்மை நிலவி வருவதை கண்டறிந்ததோடு, தங்க விலை ஏற்றத்தை சில நிதி நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் தங்களுக்கு சாதகமான, மக்களுக்கு பாதகமான, நேரடியான மற்றும் மறைமுகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் கண்டறிந்த ரிசர்வ் வங்கி, நிதி ஒழுங்குமுறைக்கான பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. மக்களின் சேமிப்பை, சொத்தை பாதுகாக்கவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் அனைவரையும் சம நிலையில் மதிப்பீடு செய்வது, கடனை திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர்களின் நகைகளை ஏலம் விடுவதில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது, கடன் கணக்குகளை கண்காணிப்பது என பல்வேறு நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றியதற்காக கடந்த ஆண்டு வங்கி சாரா நிதி நிறுவனமான ஐஐஎப்எல் நிறுவனத்தை தங்க நகை கடன் அளிப்பதிலிருந்து தடை செய்தது ரிசர்வ் வங்கி. வாடிக்கையாளர்களின் நகை மதிப்பீட்டில் முறைகேடு, கடன் வழங்கும் போது வாடிக்கையாளர்களின் நகையின் தரம் மற்றும் எடை குறித்து கடன் வழங்கும் போதும், அந்த கடனை திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர்களின் நகைகளை ஏலம் விடும்போதும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பதிந்தது, நகையின் மீதான கடன் விகித மதிப்பீட்டில் பல்வேறு முறைகேடுகள், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பணமாக கடன் அளித்தது மற்றும் கடன் தொகைக்கான பணத்தை திரும்ப பெற்றது, முறையான சட்டரீதியான ஏல விதிமுறைகளை பின்பற்றாதது, வாடிக்கையாளர்களின் கடன் மீது அளவுக்கதிமாக அபராதம் மற்றும் வட்டியை வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்த ரிசர்வ் வங்கி, பல்வேறு ஆலோசனைகள், ஆய்வுகள் செய்ததின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

>தங்கத்தை அடமானம் வைக்கும்போது அதன் மதிப்பில் 75 சதவீதம் மட்டும் கடனாக பெறலாம். அதாவது, நகையின் மதிப்பு 100 ரூபாய் என இருந்தால் 75 ரூபாய் வரை கடன் கொடுக்கப்படும். விலை குறையும் நிலையில் அந்த 25 விழுக்காடு வங்கிகளின் நிதியை பாதுகாக்கும்.

>அடமானம் வைக்கப்படும் நகையின் உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தை கடன் வாங்கும் நபர், வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். முறைகேடுகள், திருட்டு நகைகளை அடமானம் வைத்தல் போன்றவற்றை தடுக்கும்.

>தங்க நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கியில் இருந்து சான்று வழங்க வேண்டும். இதில் வங்கியும் கடன் பெறுபவரும் கையொப்பமிட்ட சான்றிதழின் நகல் வங்கியில் வைக்கப்பட வேண்டும். மிக சரியான நடைமுறை இது. சாதாரண மக்களின் துயர் துடைக்கும். அடகு வைத்த நகையை மீண்டும் சொந்தமானவருக்கே தெரியாமல் மேல் அடகு வைப்பதை தடுக்கும்.

>தங்க நகைகளில் 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டும் கடன் வழங்கப்படும். 24 காரட் தங்க நகையாக இருந்தாலும் 22 காரட்டின் மதிப்பிலேயே எடையைக் கணக்கிட்டு கடன் வழங்க வேண்டும். சில வங்கிகள் இதுவரை வியாபாரத்திற்காக செய்து கொண்டிருந்த தவறு, இதனால் திருத்தப்படும்.

>தங்க நகைகளுக்கு மட்டுமே கடன்கள் வழங்கப்படும். நகை அல்லாத தங்கக் கட்டிகளுக்கு கடன் வழங்கப்படாது. சரி தான். இதனால் தங்கத்தை பதுக்கி அதை அடமானம் வைத்து கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயல்பவர்கள் முடக்கப்படுவார்கள். மேலும், தங்கத்தின் விலை கட்டுக்குள் இருக்கும்.

>1 கிலோ வரையிலான தங்க நகைகளை மட்டுமே வங்கியில் அடமானம் வைக்க முடியும். சாதாரண ஏழை எளிய மக்களை இது எந்த விதத்திலும் பாதிக்காது.

>தங்க நகைக்கடனை திருப்பிச் செலுத்திய உடன் 7 வேலை நாள்களில் நகையை வங்கியில் இருந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கவில்லையென்றால் அடுத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் ஐந்தாயிரம் ரூபாயை வாடிக்கையாளருக்கு அபராதமாக வழங்க வேண்டும். இது நாள் வரை கால தாமதம் செய்து கொண்டிருந்த வங்கிகள் இனி அலறிக்கொண்டு நகைகளை ஒப்படைக்கும்.

>நகைகளை ஏலத்துக்குக் கொண்டு செல்லும்போது அதுகுறித்து வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் வங்கி மீது வழக்கு தொடரலாம். வெளிப்படைத்தன்மையோடு ஏலம் நடக்க வேண்டும் என்ற உறுதியே இந்த நிலைப்பாடு. இது நாள் வரை ஏலம் விடப்பட்ட நகை அதிக விலை ஈட்டினாலும் அதை மறைத்து, செயல்பட்ட நிலை மாறி, இனி அசல் மற்றும் வட்டி போக மீதி உள்ள தொகை வாடிக்கையாளர்களுக்கு செலுத்தப்படும்.

>வெள்ளி நகைகளுக்கும் கடன் பெறலாம். அதில், 999 தரத்தில் உள்ள வெள்ளி நகைகளை மட்டும் அடமானம் வைக்க முடியும். இது ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். வரவேற்கபட வேண்டிய அறிவிப்பு.

>வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்துள்ள தங்கத்தை முழுமையாக மீட்ட பின்னரே, மீண்டும் அவற்றை அடமானம் வைக்க முடியும். தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நகை கடன் ஒரு வருடத்திற்கு பெறப்பட்டிருந்தால், வட்டியை ஒரு வருட நிறைவுக்கு முன்னர் செலுத்தியிருந்தால், கடனை புதுப்பித்து கொள்ளலாம். நிலையான கணக்குகளுக்கு (Standard Account) இது பொருந்தாது. அதாவது 10,000 ரூபாய் கடன் பெற்றவர்கள் வங்கியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி வட்டியை செலுத்தியிருக்க வேண்டும். அப்படி செலுத்தாதவர்கள் அசலையும் சேர்த்து செலுத்திய பின்னரே புதிதாக கடன் பெற முடியும். இப்படி செய்வது கடன் அழுத்தத்தை குறைப்பதோடு, நகைகள் ஏலம் போகாது தடுக்கும்.

மேலும், 10,000 ரூபாய் மதிப்புள்ள நகைக்கு ஒருவர் கடன் பெறும் போது அந்த கடனின் மதிப்பு ரூபாய் 7500 தான். ஆனால், ஒரு வருடம் கழித்து வட்டி செலுத்தும் போது அந்த கடனின் மதிப்பு வட்டி சுமார் 750 சேர்த்து ரூபாய் 8250 க உயர்ந்து விடுகிறது. திடீரென்று விலை குறைந்து விட்டால் நகையின் மதிப்பை விட கடனின் மதிப்பு உயர்ந்து விடும் அல்லது கடன் தொகை அதிகமாகி விடும். இது நகை-கடன் மதிப்பின் விதிகளை மீறுகிற செயலாகும். இதையும் புதிய விதிகள் குறிப்பிடுகிறது.

ஆனால், வழக்கம் போலவே தீர விசாரிக்காமல், ஆய்வு செய்யாமல், ரிசர்வ் வங்கி ஏழை எளிய மக்களுக்கு தீங்கிழைத்து விட்டது போல் ஒரு வதந்தி அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நடந்த முறைகேடுகளை, குறைபாடுகளை களைந்து பொது மக்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பயன் தரும் வகையிலேயே ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் அமைந்துள்ளன.

வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் ஏற்றுக்கொண்ட, செய்து கொண்ட கடன் ஒப்பந்தப்படி வட்டியை செலுத்தி வந்தாலே போதுமானது, பழைய கடனையே புதுப்பித்துக் கொள்ள முடியும் என்பது தெளிவு" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RBI Gold Loan BJP Narayanan Statement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->