2026ல் மாருதி சுஸூகி வெளியிடும் 4 புதிய கார் மாடல்கள்: எலெக்ட்ரிக் முதல் ஃபேஸ்லிப்ட் வரை!என்னென்ன மாடல்கள் தெரியுமா?
Maruti Suzuki to launch 4 new car models in 2026 From electric to facelift Do you know what models
மாருதி சுஸூகி நிறுவனம் 2026ஆம் ஆண்டில் இந்திய சந்தைக்காக நான்கு புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வழக்கமாக ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று மாடல்களை மட்டுமே வெளியிடும் மாருதி, 2025ஆம் ஆண்டு ஒரே ஒரு மாடலை மட்டுமே கொண்டு வந்த நிலையில், அதற்கான ஈடுசெய்யும் வகையில் 2026ல் பெரிய திட்டத்துடன் களமிறங்குகிறது.
இந்த பட்டியலில் முக்கியமாக மாருதியின் முதல் முழு எலெக்ட்ரிக் காரான e விட்டாரா இடம் பெறுகிறது. 2025 தொடக்கத்திலேயே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி, பல காரணங்களால் தாமதமான நிலையில், தற்போது 2026 ஜனவரியில் இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா BE 6, ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், எம்ஜி ZS EV, டாடா கர்வ் EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக e விட்டாரா சந்தையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இரண்டாவது மாடலாக, தற்போது விற்பனையில் இருக்கும் ஃப்ராங்க்ஸ் கிராஸ்ஓவர் எஸ்யூவியின் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பதிப்பை மாருதி 2026ன் இரண்டாம் பாதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த Fronx Flex Fuel மாடல், 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோல் (E85) எரிபொருளில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. இது இந்தியாவில் எத்தனால் அடிப்படையிலான மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு மாருதி அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
மூன்றாவது மாடலாக, மாருதியின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனமாக ஒரு புதிய எலெக்ட்ரிக் எம்பிவி 2026ல் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. YMC என்ற குறியீட்டுப் பெயரில் உருவாகி வரும் இந்த மாடல், e விட்டாரா உருவாக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாராகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எர்டிகா மற்றும் XL6க்கு மேலான பிரீமியம் இடத்தில் இந்த எலெக்ட்ரிக் எம்பிவி அமையும் என்றும், கியா கேரன்ஸ் EVக்கு போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நான்காவது மாடலாக, பிரபலமான பிரெஸ்ஸா சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிப்ட் பதிப்பு 2026ல் அறிமுகமாக உள்ளது. வெளிப்புற வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள், புதிய வசதிகள் சேர்க்கப்படலாம். மெக்கானிக்கல் மாற்றங்கள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், CNG வேரியன்டில் அண்டர்பாடி CNG டேங்க் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், 2026ஆம் ஆண்டு மாருதி சுஸூகிக்கு எலெக்ட்ரிக், ஃப்ளெக்ஸ் ஃப்யூல் மற்றும் அப்டேட் மாடல்கள் என பல்வேறு துறைகளில் முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது.
English Summary
Maruti Suzuki to launch 4 new car models in 2026 From electric to facelift Do you know what models