ஸ்டாலினிடம் போனில் பேசியுள்ளேன், பா.ம.கவினருக்கு டாக்டர் ராமதாஸ் சொல்லும் செய்தி என்ன? - Seithipunal
Seithipunal


வன்னியர் சங்க 43 ஆவது ஆண்டு விழா முன்னிட்டு, சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்! என்ற தலைப்பில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மடல் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த மடலில், 

"என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமூகத்தை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் 42 ஆண்டுகளை நிறைவு செய்து, 43&ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.   சமூகநீதிக்காக என்னுடன் பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் இந்த நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும்பான்மையான தமிழ் நிலப்பரப்புகளை ஒரு காலத்தில் வன்னியர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். ஆனால், பல்வேறு காலலட்டங்களில் சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் கல்வி அறிவு பெற முடியாமல், வேலைவாய்ப்புகளையும் வென்றெடுக்க முடியாமல், விவசாயக் கூலி வேலை செய்து பிழைத்து, குடிசைகளுக்குள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுக்கான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 42 ஆண்டுகளுக்கு முன் திண்டிவனத்தில் உள்ள எனது இல்லத்தில் பிரிந்து கிடந்த 28 வன்னியர் அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி வன்னியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினேன். வன்னியர் சங்கம் என்பது தான் அதன் பெயர் என்றாலும் கூட, அது வன்னியர்களின் சமூகநீதியைக் கடந்து அனைவரின் சமூகநீதிக்காகத் தான் இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறது.

வன்னியர் சங்கத்தை தொடங்குவதற்காக கூட்டப்பட்ட அந்தக் கூட்டத்தில் சங்கத்தின் அடையாளமாக அக்கினி குண்டம் சின்னத்தை பயன்படுத்துவது, கொடியாக  அக்கினி குண்டம் பொறித்த மஞ்சள் கொடியையை பயன்படுத்துவது என்று அனைவரும் இணைந்து ஒருமனதாக முடிவு எடுத்தோம்.- அதன்பின் வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக நடத்திய போராட்டங்களையும், பட்ட பாடுகளையும், எம் மக்கள் செய்த தியாகங்களை நினைத்துப் பார்க்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது. அந்த நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு தான் இந்த மடலை எழுதுகிறேன்.

இன்றைக்கு இருக்கும் வலிமையுடனும், செல்வாக்குடனும் அன்றைக்கு இந்த இராமதாசு இல்லை. அன்றைய நிலையில் நான் மக்களால் மதிக்கப்படும் மருத்துவர் என்பது மட்டும் தான் எனது தகுதியாகும். ஆனால், வீழ்ந்து கிடக்கும் வன்னிய மக்களை உயர்த்த வேண்டும் என்ற உறுதியை மட்டும் நெஞ்சில் சுமந்து கொண்டு செயல்படத் தொடங்கினேன். வாரம் முழுவதும் மருத்துவராக பணியாற்றி ஈட்டிய பணத்தை எடுத்துக் கொண்டு வார இறுதி நாட்களில் ஊர் ஊராக பயணிப்பேன். பல நேரங்களில் பேருந்துகளில் அமருவதற்கு இடம் இல்லாமல் நின்று கொண்டே உறங்கிய நிலையில் பயணித்த நாள்கள் உண்டு. உன்னை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் தான் அதையெல்லாம் தாங்கும் சக்தியை தந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பேருந்து, மகிழுந்து, மாட்டு வண்டி என கிடைத்த வாகனங்களில் சென்று பாட்டாளி மக்களை சந்தித்திருக்கிறேன். இன்றைக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகள் அன்றைக்கு இல்லை. பெரும்பாலும் நான் செல்லும் கிராமங்களில் மின்சாரம் இருக்காது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் தான் மக்கள் என்னை அழைத்துச் செல்வார்கள். அந்த வெளிச்சத்தில் தான் நான் நடந்து செல்வேன்.  ஒவ்வொரு ஊரிலும் ஒரு ஸ்டூலை போட்டு அதன் மீது ஏறி நின்று தான் நான் பேசுவேன். இது போன்று நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது  மாலை 5 மணிக்கு தான் எனக்கு மதிய உணவு தருவார்கள். இரவு உணவு பல நேரங்களில் அதிகாலை 03.00 மணிக்கு தான் கிடைக்கும்.

கொடியேற்றுவதற்காக திட்டமிடப்பட்டிருந்த  பல கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி மட்டுமல்ல..... சாலைகள் கூட கிடையாது. அவ்வாறு சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு 3 மைல்கள், அதாவது 5 கிலோ மீட்டர் தூரம் வரை வயல் வரப்புகளில் நடந்து சென்று மக்களை சந்தித்தேன். வன்னியர்களுக்கு தனி இடப்பங்கீட்டை வென்றெடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். அதிகாலை 2.00 மணிக்கு ஒரு கிராமத்திற்கு கொடியேற்றச் சென்றால், அப்போது கூட அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் விழித்திருந்து என்னை வரவேற்பார்கள். பல நாட்களில் காலை 6.00 மணி வரை கூட நிகழ்ச்சிகள் நீளும். அப்படித்தான் இந்த இயக்கத்தை கட்டி எழுப்பினேன்.

 இது வரை நாம் வென்றெடுத்துள்ள சமூக நீதி என்பது பக்கத்து வீட்டிலிருந்து வாங்கி வரக்கூடிய சுக்கோ, மிளகோ அல்ல. அதை வென்றெடுப்பதற்காக நாம் நடத்திய போராட்டங்களும், சந்தித்த இழப்புகளும் ஏராளம். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே, அதாவது 1980&ஆம் ஆண்டு நிறைவில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் 20% வன்னியர் தனி இடப்பங்கீட்டை வலியுறுத்தி மிகப்பெரிய மாநாட்டை நடத்தினோம். அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்புகளை நடத்தி வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.

அதன்பின் இடப்பங்கீட்டு போராட்டங்களின் தொடக்கமாக 15.03.1984&இல் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் பட்டினிப் போராட்டம் எனது தலைமையில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 25.08.1985&இல் தீவுத்திடலில் இருந்து சீரணி அரங்கத்திற்கு மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அடுத்தக்கட்டமாக 06.05.1986 அன்று ஒருநாள் சாலை மறியல் போராட்டம், 19.12.1986&இல் தொடர்வண்டி மறியல் போராட்டம் என அடுத்தடுத்து பாட்டாளி சொந்தங்களாகிய உங்களின் ஆதரவு & ஒத்துழைப்புடன்  போராட்டங்கள்  நடத்தப்பட்டன. அதன்பிறகு தான் தமிழ்நாடு நம்மை திரும்பிப் பார்க்கத் தொடங்கியது.

ஆனாலும், அன்றைய அரசு நமது கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட முன்வராத நிலையில் தான் நமது சமூகநீதி நாளான 17.09.1987 அன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்தோம். அந்தப் போராட்டத்தை குலைக்க  ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளை இப்போது நினைத்தால் கூட உடல் நடுங்குகிறது. வீடுகளுக்குள் புகுந்து பாட்டாளி சொந்தங்களை சிறை பிடிப்பது, வீடுகளை சூறையாடுவது உள்ளிட்ட எல்லையில்லாத ஒடுக்குமுறைகள் அரங்கேற்றப்பட்டன. அதனால், பல நாட்கள் நமது சொந்தங்கள் கரும்புத் தோட்டங்களிலும், பம்ப் செட்டுகளிலும், காடுகளிலும், மலைகளிலும் தான் பதுங்கி வாழ்ந்தனர். என்னையும் காவல்துறை துரத்திக் கொண்டே தான் இருந்தது. மாறு வேடத்தில் புதுவையில் முகாம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மகிழுந்தில் சுற்றி வந்து போராட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் பின்னர் மஞ்சள் பூ ஆபரேஷன் (Yellow Flower Operation) என்ற பெயரில் துணை இராணுப்படைகளை கொண்டு வந்து ஒடுக்கினார்கள். இவ்வாறாக இடப் பங்கீட்டுப் போராட்டங்களுக்காக பட்ட பாடுகள் இன்னும் இதயத்தில் பசுமை மாறாமல் இருக்கின்றன.

தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகள் நமது சொந்தங்களின் மார்புகளில் பாயத் தொடங்கின. பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம்,  சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன்,  பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பாட்டாளிகளும் துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கியும், காவல்துறை தாக்குதலிலும் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பிறகும் பலர் உயிர்த்தியாகம் செய்தனர்.

பாட்டாளி சொந்தங்கள் செய்த தியாகங்களின் பயனாகத் தான் வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை 1989&ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் வழங்கினார். 1951&ஆம் ஆண்டில் தொடங்கி 1989&ஆம் ஆண்டு வரை 38 ஆண்டுகள் ஒரே பிரிவாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பிரித்து  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என்ற தனிப்பிரிவை உருவாக்கச் செய்தது நமது சாதனை. அதற்காக நாம் செய்த தியாகங்கள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை.
வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய 20% இட ஒதுக்கீடு 108 சாதிகளுக்கு இணைத்து வழங்கப்பட்டதால் நமக்கு கிடைக்கன் வேண்டிய உரிமைகள் கிடைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டியதன் பயனாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. சில சதிகாரர்கள் தொடர்ந்த வழக்குகளால் உயர்நீதிமன்றத்தில் அது முடக்கப்பட்டாலும் கூட, இட ஒதுக்கீட்டு சட்டத்தில் உள்ள சில குறைகளை சரி செய்து புதிய சட்டம் இயற்றலாம்; இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதனடிப்படையில் போதிய புள்ளிவிவரங்களுடன் 10.50% இட ஒதுக்கீட்டு சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற கலைஞரின் புதல்வர் இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதுடன், தொலைபேசியிலும் பேசினேன். நமக்கான இட ஒதுக்கீட்டை விரைவில் வென்றெடுப்போம். வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க நாம் சாதிக்க வேண்டியவை  ஏராளம்... ஏராளம்.  அவை அனைத்தையும் ஒன்று பட்டு வென்றெடுப்பதற்காக உழைக்க இந்த நன்னாளில் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DR Ramadoss wrote letter to PMK Cadres for vanniyar sanga annual day


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->