இஸ்லாமியர்களின் புனிதப்பயணத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது பிற்போக்கு நடவடிக்கை - டாக்டர் ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


இஸ்லாமியர்களின் புனிதப்பயணத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது பிற்போக்கு நடவடிக்கை என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;  

இஸ்லாமியர்களின் ஹஜ் புனிதப்பயணத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. ஹஜ் பயணத்திற்கான வசதிகளை அதிகரிப்பதற்கு பதிலாக செலவு குறைப்பு என்ற பெயரில் வசதிகளைக் குறைப்பது பிற்போக்கானது.

ஹஜ் மானியத்தை அடுத்த பத்தாண்டுகளில் ரத்து செய்ய வேண்டும் என்று 2012-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். இது உண்மை தான்.

ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளை செயல்படுத்த மறுக்கும் மத்திய அரசு, ஐந்தாண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை செயல்படுத்த இவ்வளவு ஆர்வம் காட்டுவதும், 2022-ஆம் ஆண்டுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக நீக்கினால் போதுமானது என உச்சநீதிமன்றம் கூறிய போதிலும், அதை ஒரே கட்டமாக நடப்பாண்டிலேயே முழுமையாக ரத்து செய்வதற்கு அரசு வேகம் காட்டுவதும் ஐயமளிக்கிறது.

ஹஜ் மானியம் உருவான விதம் குறித்து தெளிவுபடுத்துவது சரியானதாக இருக்கும் என கருதுகிறேன். இஸ்லாமியரின் ஹஜ் புனிதப்பயணம் தொடக்கத்தில் கடல் வழியாகவே மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வானூர்தி சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், ஹஜ் பயணிகளை விமானம் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரத்திற்கு அனுப்பி வைக்க இந்திரா காந்தி தலைமையிலான அரசு முடிவு செய்தது.

கடல்வழிப் பயணத்திற்கான கட்டணம் குறைவாகவும், விமானப் பயணக் கட்டணம் அதிகமாகவும் இருந்த நிலையில் வித்தியாசத் தொகையை மத்திய அரசு செலுத்தும் என்று இந்திரா அரசு அறிவித்தது. இதைத் தான் ஹஜ் மானியம் என்று பலரும் கூறுகின்றனர். கப்பலில் சென்ற ஹஜ் பயணிகளை  விமானத்தில் அனுப்பி வைத்தது மட்டும் தான் மத்திய அரசு செய்து தந்த வசதியாகும். மற்றபடி எந்த இஸ்லாமியரும் அரசிடமிருந்து ஹஜ் மானியம் என்ற பெயரில் எந்த உதவியும் பெறுவதில்லை.

ஹஜ் மானியத்தை ரத்து செய்திருப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, வானூர்திகள் அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன்பிருந்தவாறு ஹஜ் பயணிகளை கப்பலில் அனுப்ப  தீர்மானித்திருக்கிறது. இதற்காக தனிக் கப்பல்களை இயக்க சவுதி அரேபிய அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  புதிய திட்டத்தின்படி மும்பையிலிருந்து  சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு கப்பலில் சென்று அங்கிருந்து மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

மும்பை முதல் ஜெட்டா வரையிலான  2300 கடல் மைல் தொலைவைக் கடக்க எவ்வளவு அதிநவீன கப்பல்களாக இருந்தாலும் குறைந்தது  5 நாட்கள் ஆகும். அதுமட்டுமின்றி ஹஜ் பயணம் புறப்படும் இடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப் பட்டிருப்பதால் புறப்படும் இடங்களைச் சென்றடையவே சில நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஒரு சில நாட்களில் முடிய வேண்டிய ஹஜ் பயணத்தை ஒரு மாதத்திற்கு இழுப்பது நியாயமற்றதாகும்.

ஹஜ் பயணத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.450 கோடி செலவழிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இது ரூ.250 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால் அரசுக்கு ரூ.250 கோடி மிச்சமாகும். ஆனால், ஹஜ் பயணிகளுக்கு அதைவிட 10 மடங்கு அதிக தொகையும், தேவையற்ற உடல் வலி, பாதுகாப்பு அச்சுறுத்தல், மன உளைச்சல் ஏற்படும். இதற்கெல்லாம்  அரசு காரணமாகக்கூடாது.

ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்த 1300 இஸ்லாமிய சகோதரிகளை குலுக்கல் இல்லாமல் தேர்வு செய்ததும், அவர்களுக்கு தனி வாகனம் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதும் வரவேற்கப்பட வேண்டியவை. ஹஜ் மானியத்தை ரத்து செய்வதால் கிடைக்கும் தொகை இஸ்லாமியர்களின் கல்வி மற்றும் அதிகாரமளித்தலுக்கு செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது தான்.

எனினும், இஸ்லாமியர்களின் புனிதக் கடன் ஹஜ் பயணம் தான் என்பதாலும், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கு தொலைதூர கடல் பயணம் ஒத்துவராது என்பதாலும் ஹஜ் பயணிகளை முன்பிருந்தவாறே விமானம் மூலம் அழைத்துச் சென்று  திருப்பி அழைத்து வரும் வகையில் நாட்டின் ஹஜ் கொள்கையை அரசு மாற்றியமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor ramadoss statement about haj subsidy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->