ஏழு அப்பாவி தமிழர்களை விடுதலை செய்திடுக : டாக்டர் ராமதாஸ் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


இராஜிவ் காந்தி கொலை வழக்கில் அநியாயமாக தண்டிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து 6 வாரங்களில்  மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 7 தமிழர் விடுதலை வழக்கில் 4 ஆண்டுகளாக நீடிக்கும் இழுபறிக்கு முடிவு கட்ட உச்சநீதிமன்ற ஆணை பெருமளவில் உதவும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுமே தண்டிக்கப்பட தகுதியற்றவர்கள்; அவர்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். எந்த கோணத்தில் இப்பிரச்சினையை அணுகினாலும் 7 தமிழர்களை விடுதலை செய்வது தான் சரியான முடிவாக இருக்கும்.

இராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களில் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் தூக்குத் தண்டனை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள மூவரின் தூக்கு தண்டனையும் கடந்த 2014-ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி குறைக்கப்பட்டது. அவர்கள் 14 ஆண்டு சிறை தண்டனைக் காலத்தை ஏற்கனவே நிறைவுசெய்து விட்ட நிலையில், அரசுகள் விரும்பினால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின்படி இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம்  ஆலோசனை வழங்கியிருந்தது.

அதன்படி 7 தமிழர்களை விடுதலை செய்வதாக அறிவித்த தமிழக அரசு இதுகுறித்த  மத்திய அரசின் கருத்தைக் கேட்ட போது, எந்தக் கருத்தையும் தெரிவிக்காத மத்திய அரசு, 7 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இப்போது இந்த உத்தரவை  பிறப்பித்திருக்கிறது.

ஒருவகையில் பார்த்தால் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான விவகாரம் 4 ஆண்டுகளுக்கு முன்பு எந்த புள்ளியில் இருந்ததோ, அதே புள்ளிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறது. அதுமட்டுமின்றி, 7 தமிழர்கள்  விடுதலை குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு மத்திய அரசிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது சற்று பின்னடைவு போலத் தோன்றினாலும், இடைப்பட்ட 4 ஆண்டுகளில் 7 தமிழர்கள் விடுதலைக்கு சாதகமான  பல புதிய அம்சங்கள் உருவாகியுள்ளன. 

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன்,  ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கிவந்து சிவராசனிடம் கொடுத்தேன். ஆனால், அவை எதற்காக வாங்கப்பட்டன என்பது எனக்குத் தெரியாது’ என்று பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தில் ஒரு பகுதியை வேண்டுமென்றே நீக்கிவிட்டு பதிவு செய்தேன் என கூறியுள்ளார்.

அப்போது வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்திருந்தால் பேரறிவாளன் இப்போது வெளியில் நடமாடிக் கொண்டிருப்பார். பேரறிவாளன் மீது எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இராஜிவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்தது யார்?  என்பதை சிறப்புப் புலனாய்வுக் குழுவால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ராஜிவ் கொலையின் பின்னணியில் உள்ள பெருஞ்சதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பல்முனை கண்காணிப்புக் குழுவின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இவற்றின் அடிப்படையில் பேரறிவாளனையும், மற்ற  6 தமிழர்களையும் நிரபராதி என்று விடுதலை செய்ய முடியும். அவ்வாறு இருக்கும் போது 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்ட அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய மத்திய அரசு மறுக்க முடியாது. ஒருவேளை மத்திய அரசு மறுத்தாலும் கூட தகுதியின் அடிப்படையில் அவர்களை நிரபராதி என அறிவித்து உச்சநீதிமன்றமே விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

எனினும், 7 தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை எடுத்து அறிவித்தது தமிழக அரசு தான் என்பதால் அவர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடுமையான அழுத்தம் கொடுத்து 7 தமிழர்களின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டிருக்கிறது என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இதுகுறித்த தீர்மானத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor ramadoss says TN govt should take action to 7 tamil's release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->