சேலம் எட்டுவழிச்சாலை வழக்கு தீர்ப்பு! யாரால் தடை கிடைத்தது! ஆதாரங்களுடன் வெளியான பரபரப்பு தகவல்!  - Seithipunal
Seithipunal


பசுமைவழி திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் 08-04-2019 அன்று தீர்ப்பளித்தது.

விவசாயிகளும், நில உரிமையாளர்களும் நிம்மதி அடைந்தாலும், சமூக ஊடகங்களில் இந்த வெற்றி யாருக்கு சொந்தம் என விவாதமாகி இருக்கிறது. அதில் பிராதானமான கேள்விகள்/குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான பதிலும் விரிவாக.

முதலில் வழக்கு போட்டவர் யார்?

இத்திட்டம் தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடுத்தது ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன். (வழக்கு எண்: 15889/2018 ) அது, நிலம் கையகப்படுத்துதல், நிவாரணம் வழங்குதல் பற்றிய சட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு விலக்கு அளிக்கவகை செய்யும் சட்டப்பிரிவை நீக்க கோரிய வழக்கு தான் அவர்கள் தொடுத்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

 No photo description available.

அடுத்து வழக்கு தொடுத்தவர் திரு.சூரியபிரகாசம் என்பவர்.(வழக்கு எண் 16146/2018) அதற்கு பிறகு, நில உரிமையாளரான பி.வி.கிருஷ்ணமூர்த்தி (வழக்கு எண் 16630/2018) நிலம் கையகப்படுத்துதல் என்ற அடிப்படையில் வழக்கு தொடுத்தார்.

நாதகவின் வக்கீல் சுரேஷ் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு எண். 16961/2018, பாமகவின் அன்புமணி தொடுத்த வழக்கு எண் 20014/2018

அது போக விவசாயிகள் சார்பில் பாமக வழக்கறிஞர் பாலு தொடுத்த வழக்குகள், எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்ட கூட்டமைப்பு, இன்ன பிற சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்குகள் என கிட்டத்தட்ட 46 வழக்குகள் மேல் பதியப்பட்டன. தற்போது விவாதத்திற்கு அழைக்கும் முக்கிய எதிர்க்கட்சியான திமுக வழக்கு எதுவும் தொடுக்கவில்லை. 


ஏற்று கொள்ளப்பட்ட வழக்குகள் எல்லாம் ஒன்றாகவே விசாரிக்கப்பட்டன. ஒன்றாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.


பாமக தான் முதலில் வழக்கு தொடுத்ததாக அன்புமணியோ,பாமகவோ உரிமை கோரவே இல்லை.

நாங்கள் தான் முதலில் வழக்கு தொடுத்தோம் என பி.வி,கிருக்ஷ்ணமூர்த்தி,நாதக சொல்வதில் உண்மையில்லை.

போலியாக பேர் எடுத்து கொள்கிறதா பாமக?

இந்த தீர்ப்பு விஷயத்தில், அடுத்தவர்களின் உழைப்பில் அநியாயமாக தனக்கு பெருமை தேடிக்கொள்கிறது பாமக என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதில் உண்மை இருக்கிறதா என பார்ப்போம்.

பாமகவை பொறுத்தவரை அரசியல் ரீதியான போராட்டம், சட்டரீதியிலான போராட்டம் என இரண்டு வகையிலும் எட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியது. பிரதான எதிர்க்கட்சியான திமுக சில அடையாள போராட்டங்களை நடத்தினாலும், சட்ட ரீதியாக எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. ஜூலை 19, 2018 இல் அறிவாலய வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஸ்டாலின், எட்டுவழிச்சாலை திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை; அதை வரவேற்பதாகவும், விவசாயிகளிடம் கருத்து கேட்டு விட்டு திட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் கூறியிருந்தார்.

  

நாம் தமிழர் கட்சி, கனிம வளம் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு என்ற அடிப்படையில் வழக்கு தொடுத்ததாக அவர்களது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பாமகவோ இந்த திட்டமே தேவையற்றது; ஏற்கெனவே இருக்கும் மூன்று சாலைகளை விரிவுபடுத்துதலே போதுமானது என்பதை மிக வலுவாக ஆரம்பம் முதலே வலியுறுத்தியது. 
விவசாய நிலங்கள், காப்பு வனங்கள்,மலைகள் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இத்திட்டத்தை முழுதாக ரத்து செய்ய வேண்டும் என்று அழுத்தமாக பேசியது. வழக்கு தொடுப்பதற்கு முன்பிருந்தே இதே நிலைப்பாட்டை பல பேட்டிகளிலும் பதிவு செய்து இருக்கிறார்கள் அன்புமணியும், பாமகவின் சார்பாக விவாதங்களில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளும்.

வழக்கில் அன்புமணியின் முக்கிய பங்களிப்பு:

வழக்கில் அன்புமணி 4வது மனுதாரர் தான் என சிலர் சொன்னாலும், திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதற்கு எதிரான ஆதாரங்களையும், மக்கள் ஆதரவையும் திரட்டுவதில் அன்புமணி ஈடுபட்டு இருந்தார் என்பதை அந்த காலகட்டங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் அறிய முடிகிறது. 
ஜூன் 2018 மாதம் முழுவதும் தனது தருமபுரி தொகுதி மட்டுமல்லாது எட்டுவழிச்சாலையில் பாதிக்கப்படும் ஐந்து மாவட்ட நில உரிமையாளர்களையும் சந்தித்து கருத்து கேட்டார் (Public hearing). 
தருமபுரியில் இரண்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களும் இல்லை என்ற நிலையில் அன்புமணியின் செயல்பாடுகள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஒரு கட்டத்தில் தருமபுரியில் நுழையவே அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதையும் எதிர்த்து வழக்கு தொடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மக்களிடம் கருத்து கேட்க சந்திக்க அனுமதி பெற்றார்.

அன்புமணியின் எம்பி பதவி இந்த வழக்கிற்கு இன்னொரு இடத்தில் வெகுவாக உதவியது. 
20.07.2018 அன்று எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் பாதிப்பு அளவீடு பற்றிய அறிக்கை (Environment Impact Assessment Report) சமர்ப்பிக்கப்பட்டதா அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்வி எழுப்பி, ‘இல்லை’ என்ற பதிலை அதிகாரப்பூவமாக பெற்றார். ஸ்டர்லைட்,ஓஎன்ஜிசி திட்டங்கள் குறித்தும் இக்கேள்வியில் கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆதாரம் : http://164.100.47.194/Loksabha/Questions/QResult15.aspx?qref=69298&lsno=16 )

இந்த கருத்து கேட்பு பற்றிய அறிக்கைகள்,காணொளிகள் மற்றும் அளவீடு அறிக்கை பற்றிய பதிலும் இந்த வழக்கில், மத்திய மாநில அரசுகள் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், அவசர கோலத்தில் திட்ட வேலைகளை துவக்கின என நிரூபிக்க மிக முக்கிய ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டன.
இதனடிப்படையில் தான் இறுதி தீர்ப்பும் அமைந்துள்ளது.

சமூக ஊடக கேள்விகளுக்கே இத்தனை ஆதாரங்கள், தரவுகள் திரட்டி பதில் எழுத வேண்டி இருக்கையில், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணம், இயற்கை வளங்களை பாதுகாக்க எத்தனை தரவுகளை திரட்டி வலுவாக வாதாட வேண்டி இருக்கும் ? 
அதற்கான கால அவகாசத்தை தான் அன்புமணி எடுத்து கொண்டாரே ஒழிய, மற்றவர்கள் எல்லாம் வழக்கு போட்டதை பார்த்த பிறகு, நாமும் ஒரு வழக்கு போடுவோம் என கடமைக்கு சேர்ந்து கொள்ளவில்லை என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

வழக்கு தொடுக்க விவசாயிகளிடம் பணம் வாங்கினாரா அன்புமணி?

இது முற்றிலும் ஆதாரமில்லாத அயோக்கியத்தனமான அறிவில்லாத்தனமான குற்றச்சாட்டு. 10000 கோடி மதிப்பிலான திட்டத்தை தடுத்து நிறுத்த இரண்டு கோடி ரூபாய் ஏழை விவசாயிகளிடம் பெறுவதற்கு பதில் வழக்கு போடாமல் இருக்க காண்டிராக்டர்களிடம் பல கோடிகள் வாங்கி கொள்ளலாமே. தங்கள் வழிக்கு வராதவர்களை எல்லாம் பெட்டி வாங்கி விட்டார்கள் என கறை பூசுவது திமுகவின் வழக்கம். மக்கள் நல கூட்டணி அமைப்பதற்காக வைகோ 1500 கோடி பணம் பெற்றார் என சென்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தனர். இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பாமகவின் மேல் அவதூறு. இந்த குற்றச்சாட்டை விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மறுத்து, அன்புமணி வழக்குக்கு செய்த உதவிகளை எடுத்து கூறியுள்ளார். பணம் கொடுத்ததாக ஒரு விவசாயி கூட நேரிடையாக சொல்லவில்லை.

உண்மையில், வழக்கு தொடுத்த பல விவசாயிகளின் வழக்கு செலவை அன்புமணி தான் ஏற்றுக் கொண்டார். புகையிலை விற்கும் ஐடிசி நிறுவனம், பெப்ஸிகோ நிறுவனம் முதலிய பன்னாட்டு நிறுவனங்களையே மக்கள் நலனுக்காக எதிர்த்த அன்புமணி மீது இப்படியான ஒரு குற்றச்சாட்டை சொல்வது சில இழிபுத்திக்காரர்களின் ஆழ்மன வன்மம் மட்டுமே.

இறுதி தீர்ப்பில் அன்புமணி பெயர், பாமக வழக்கறிஞர் பெயர்கள் குறிப்பிடப்படவில்லையே?

பியூஷ் மனுஷ் போன்ற சிலர் இறுதி தீர்ப்பில், பாமக வழக்கறிஞர்கள் பெயரோ, அன்புமணி பெயரோ குறிப்பிடப்படவில்லை; அவர்கள் வாதாடவே இல்லை என்று உள்நோக்கத்துடன் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 46 வழக்குகளின் வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் பெயர் அனைத்தும் தீர்ப்பில் இருக்கிறதா ? இல்லை. அதற்காக அவர்கள் வாதாடவே இல்லை என சொல்வது அவர்களின் உழைப்பை, நல்லெண்ணத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.

அனைத்து வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்பட்டதால், பல இடங்களில் பெட்டிஷனர்கள், வழக்கறிஞர்கள் என்று பன்மையில் தான் குறிப்பிட்டு உள்ளனர் நீதிபதிகள். அதனால் பாமக வழக்கறிஞர்கள் வாதாடவில்லை என்றாகாது.

தீர்ப்பு விவரம்: 

இவ்வழக்கில், நில உரிமையாளர்களை அப்புறப்படுத்தக்கூடாது என்று 21-08-2018 இல் இடைக்கால தீர்ப்பு வந்த போது பாமக வழக்கறிஞர்கள் பாலு, ராஜா அவர்களின் வாதம் மிகத்தெளிவாக பல்வேறு செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு அடிப்படையில் 22-08-2018இல் நியூஸ்7 தொலைக்காட்சியில் எட்டுவழிச்சாலை: அரசியல் போராட்டமாக மாற்றுகிறாரா அன்புமணி என்ற விவாதம் நடந்தது

அப்போதெல்லாம் அன்புமணி போலியாக கிரெடிட் எடுத்து கொள்கிறார் என்று சொல்லாதவர்கள் இறுதி தீர்ப்பு வந்த பிறகு அப்படி சொல்வதை பார்க்கையில் , இறுதி தீர்ப்பு விவசாயிகளுக்கு சாதகமாக வராது என்றே அவர்கள் நம்பியும், விரும்பியும் இருந்தார்களோ என எண்ணத்தோன்றுகிறது.

நாதக நாங்கள் தான் முதலில் வழக்கு தொடுத்தோம் என்று சொன்ன உண்மைக்கு புறம்பான செய்தியை மறுக்காமல், நாதகவின் முயற்சிகளுக்கு நன்றி என்று பதிவிட்ட பியூஷ் மனுஷ், பாமக மட்டும் போலி கிரெடிட் எடுத்து கொள்கிறது என்று தொடர்ந்து பொய் பரப்புவதன் பின்னணியில்,
சேலம் போத்தீஸ் நிறுவனத்திடம் கடை முன்பு இருந்த மரம் வெட்டப்பட்டது தொடர்பாக ரூ.7.5 லட்சம் ரூபாய் கட்ட பஞ்சாயத்து செய்து பெற்றார் பியூஷ் என சேலம் பாமக பொறுப்பாளர் அருள் ராமதாஸ் வழக்கு தொடுத்தது தான் என கருத இடம் உண்டு. 

பாஜக கூட்டணியில் இருக்கும் போதே தான் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி இருந்தாலும் வழக்கில் நிலைப்பாடு மாறாது என்றார். அது போலவே நடந்தது. தீர்ப்புக்கு அடுத்த நாளே, அரசு மேல்முறையீடு செய்தால் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என கோரும் கேவியட் மனுவை அன்புமணி தான் முதல் ஆளாக தாக்கல் செய்துள்ளார்.

இத்தனைக்கு பிறகும் பாமகவையும்,அன்புமணியையும் குறை சொல்பவர்கள், அதிமுக கூட்டணியில் ஏன் பாமக நீடிக்கிறது, விலகுமா என்றெல்லாம் கேள்வி எழுப்புபவர்கள், தேர்தலுக்கு சில தினங்களே இருந்தாலும், திமுக கூட்டணியை பாமக தேர்ந்தெடுக்கவில்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாத, தோல்வி பயத்தில் இருப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

‘போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும்படியாக வழக்கின் வெற்றியை ‘விவசாயிகளுக்கு அர்ப்பணித்து விட்டு’ சாலமன் கதையில் வரும் நற்தாயாக அன்புமணி அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார்.

ஆனால், கடந்த காலங்களை போல் பாமகவின் உழைப்பில் அடுத்தவர் பெயர் வாங்கி போவதை இனியும் அனுமதிக்க கூடாது என்பதற்காக வருங்காலத்துக்கான ஆவணமாக இதை பதிவு செய்வது தேவையாகிறது.

தரவுகள் சேகரிப்பும், கட்டுரையும் : மருத்துவர் சந்திரலேகா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 lane case verdict behind pmk dr anbumani MP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->