உலக வரைபடத்தில் 450 ஆண்டுகளாக ஆப்பிரிக்காவும் இந்தியாவும் குறுகி உள்ளமைக்கு பின்னால் உள்ள மர்மம் என்ன..? எப்போது தீர்வு..? - Seithipunal
Seithipunal


உலக வரைபடத்தில் இந்தியாவும், ஆப்பிரிக்க கண்டமும், உண்மையில் கொண்டிருக்கும் நிலப்பரப்பை விட  குறுகியதாக சித்தரிக்கப்பட்டுள்ளன. 450 ஆண்டுக்கும் மேலாக தொடரும் இந்த நிலைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, உலகம் முழுவதும் வலுத்துள்ளது.

தற்போது நாம் பயன்படுத்தி வரும் உலக வரைபடங்கள், 16-ஆம் நுாற்றாண்டில் தயார் செய்யப்பட்டவை. இதனை, கப்பல் போக்குவரத்துக்காக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மெர்கேட்டர் என்பவர், 1569-ஆம் ஆண்டு வெளியிட்டார். 450 ஆண்டுகளுக்கு மேலாக அந்த உலக வரைபடங்களே தற்போதும் புழக்கத்தில் உள்ளன.

எளிதான கடல் பயணத்துக்கு தகுந்தபடி தயார் செய்யப்பட்ட இந்த உலக  வரைப்படம், துருவப்பகுதியை ஒட்டியுள்ள நாடுகளும், கண்டங்களும், இருப்பதை காட்டிலும் பெரியதாக இந்த வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், பூமத்திய ரேகையை ஒட்டியிருக்கும் நாடுகள், கண்டங்கள், உண்மையில் இருப்பதை காட்டிலும் குறுகலாக, சிறியதாக காண்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆப்பிரிக்காவில் 14-இல் ஒரு பங்கு மட்டுமே நிலப்பரப்பை கொண்ட கிரீன்லாந்து, ஆப்பிரிக்காவுக்கு இணையான நிலப்பரப்பை கொண்டது போல, வரைபடத்தில் காணப்படுகிறது.

கிரீன்லாந்து மட்டுமின்றி, வட அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களும், உண்மையான நிலப்பரப்பை காட்டிலும், அளவில் பெரியதாக வரைபடத்தில் காண்பிக்கப்படுகின்றன. அத்துடன், கிரீன்லாந்து இந்தியாவை விட அதிக நிலபரப்பை கொண்டது போலவும் வரைபடத்தில் காணப்படுகிறது. உண்மையில், கிரீன்லாந்தை காட்டிலும் இந்தியா ஒன்றரை மடங்கு அதிக நிலப்பரப்பு கொண்ட நாடாகும்.

மேலும், ஆப்பிரிக்கா கண்டத்தில் பாதி அளவு பரப்பை மட்டுமே கொண்டுள்ள வட அமெரிக்கா, அதற்கு இணையான பரப்பு கொண்டது போல வரைபடத்தில் .காணக்கூடியதாக உள்ளது. அத்துடன்,  ஐரோப்பா கண்டம், அதன் உண்மையான பரப்பை காட்டிலும் பெரியதாக வரைபடங்களில் காண்பிக்கப்படுகிறது.

இதன்படி, பார்த்தால், உலக நாடுகளை ஐரோப்பிய நாடுகள் அடிமைப்படுத்தி ஆட்சி நடத்தியதன் விளைவாக, இந்த தவறு நீண்ட காலமாக உலகம் முழுவதும் தொடர்ந்து வருகிறது.  அவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை காட்டவும், தங்கள் நாடுகள் பெரிய நாடுகள் என்று உலகம் முழுவதும் நம்ப வைக்கவும், ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்கள் இந்த வரைபடங்களை பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.

ஆனால், அந்த வரைபடங்கள் உண்மையில் தவறானவை என்பது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. ஆனாலும், தற்போது வரை அவற்றை பயன்படுத்துவது உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விவகாரத்தை இப்போது ஆப்பிரிக்க நாடுகள் கையில் எடுத்துள்ள நிலையில், வரைபடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற பிரசாரத்தை, ஆப்பிரிக்க யூனியன் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளது.

மேலும், தவறுகளுடன் கூடிய மெர்கேட்டர் வரைபடங்களுக்கு பதிலாக, துல்லியமான வரைபடங்கள் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று இணையத்தில் நடக்கும் பிரசாரத்தை ஆப்பிரிக்க யூனியன் ஆதரித்து வருகிறது.

இது குறித்து, ஆப்பிரிக்க யூனியன் துணைத்தலைவர் செல்மா மலிகா ஹதாதி கூறுகையில், ''இது வெறும் வரைபடம் தொடர்பான பிரச்னை மட்டுமல்ல. ஆப்பிரிக்காவின் உண்மையான வரைபடத்தை மாற்றிக்காட்டுவது என்பது, பல்வேறு சர்வதேச விஷயங்களிலும் ஆப்பிரிக்க நாடுகள் மீதான பார்வையை மாற்றி விடுகிறது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சமீபத்தில் விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா, ''இந்தியா உண்மையில் வரைபடத்தில் இருப்பதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது,'' என்று கூறியிருந்தார். இதனால், ஆப்பிரிக்க யூனியன் நாடுகளுடன், இந்தியாவும் இணைந்து வரைபடத்தை மாற்றி அமைக்க குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is the reason why Africa and India have been shrinking on the world map for 450 years


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->