டொனால்ட் டிரம்ப் வரிக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ‘நோ’....! - புதிய 10% உலகளாவிய வரியுடன் டிரம்ப் அதிரடி
US Supreme Court says No Donald Trump tax Trump takes action new 10percentage global tax
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், இந்தியா, சீனா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருட்களுக்கு ‘பரஸ்பர வரி’ என்ற பெயரில் கூடுதல் இறக்குமதி வரிகளை விதித்தது.
அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகள் அதிக சுங்கக் கட்டணங்களை விதிப்பதாக குற்றம்சாட்டி, 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வரி விதிப்புகள் அரசியலமைப்புக்கு முரணானவை என எதிர்க்கட்சிகள் மற்றும் பல தரப்பினரும் அமெரிக்க உச்சநீதிமன்றம்-இல் வழக்கு தொடர்ந்தனர். 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
அதில் 6 நீதிபதிகள், “வரி விதிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளது; நிர்வாகத்துக்கு அந்த அதிகாரம் இல்லை” எனத் தெளிவுபடுத்தி, டிரம்ப் அமல்படுத்திய வரிகளை செல்லாததாக அறிவித்தனர்.
மீதமுள்ள 3 நீதிபதிகள் மட்டும் அவை சட்டபூர்வமானவை என கருத்து தெரிவித்தனர். பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில், டிரம்ப் விதித்த வரிகள் ரத்து செய்யப்பட்டன.இந்த தீர்ப்பால் அதிருப்தியடைந்த டிரம்ப், பின்னடைவை சமாளிக்க புதிய மாற்று நடவடிக்கையாக உலகளாவிய 10 சதவீத கூடுதல் வரியை அறிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக இந்த 10 சதவீத கட்டணம் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்கு இணையாக, பிரிவு 232 மற்றும் 301-ன் கீழ் ஏற்கனவே அமலில் உள்ள வரிகளும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த புதிய வரி உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட பிறகு, அது உடனடியாக அமலுக்கு வருவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார். சில கனிம வளங்கள், இயற்கை வளங்கள், உரங்கள், ஆரஞ்சு, மாட்டிறைச்சி, சில மருந்துகள், மின்னணு பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரிவு 122-ன் கீழ் விதிக்கப்படும் இந்த வரி அதிகபட்சம் 150 நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும்; அதன் பின்னர் தொடர வேண்டுமெனில் பாராளுமன்ற ஒப்புதல் அவசியம்.மேலும், 1962-ஆம் ஆண்டு வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் பிரிவு 232-ஐ பயன்படுத்தியும் சில தனிப்பட்ட வரிகள் தொடரப்படுகின்றன.
இதனால், அமெரிக்காவுடன் ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தம் செய்த நாடுகளும் தற்போது புதிய 10 சதவீத கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.இந்த தற்காலிக வரி நடவடிக்கை வருகிற 24-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத வரி தற்போது 10 சதவீதமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது நிரந்தர சலுகை அல்ல; வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் முடிவை பொறுத்தே இறுதி வரி விகிதங்கள் அமல்படுத்தப்படும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
US Supreme Court says No Donald Trump tax Trump takes action new 10percentage global tax