அமெரிக்காவின் 15 அம்ச கோரிக்கை; மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான்; ஈரானின் நிலைப்பாடுதான் என்ன..?
Pakistan Mediates on the USs 15 Point Demands to Ira
அமெரிக்காவின் 15 அம்ச கோரிக்கைகளுக்கு ஈரான் பெரியளவில் விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது. எந்தவொரு பேச்சுவார்த்தையும் தங்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போக வேண்டும் எனவும் அமெரிக்காவுக்கு ஈரான் வலியுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் 26 நாட்களை கடந்துள்ள அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தப்படாமல் மேலும் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் நீர்வழிமார்க்கமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கியுள்ளது.
இதன்காரணமாக சர்வதேச அளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சமீபகாலமாக ஈரானிடம் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அத்துடன், 05 நாட்களுக்கு ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும் உறுதியளித்திருந்தார்.
ஆனால், இதை ஈரான் மறுத்துள்ளது. ட்ரம்பின் பேச்சை சிறுபிள்ளை தனமானது என்றும் போலியான செய்தி என்று கேலி செய்திருந்தது. அத்துடன், இஸ்ரேல் மீதும் சரமாரியாக தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால், மீண்டும் ஈரான் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர, ஈரானிடம் 15 அம்ச போர்நிறுத்தத் திட்டத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் பாகிஸ்தான் மூலம் ஈரானிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானிய இடைத்தரகர்கள் மூலம் இந்த முன்மொழிவு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டால், பேச்சுவார்த்தையை தங்கள் நாட்டில் நடத்த தயாராக இருப்பதாகவும், அந்த வாய்ப்பு தங்களுக்கு தரப்பட்டால் அதை கௌரவமாகக் கருதுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் குறித்த 15 அம்ச கோரிக்கைகளில், ஈரான் தனது முக்கிய மூன்று அணுசக்தி மையங்களை முடக்கவேண்டும் என்றும், ஈரானிய மண்ணில் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் பிராந்தியக் குழுக்களுக்கான ஆதரவைக் கைவிட வேண்டும் என்றும், ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக, ஈரான் மீது சர்வதேச சமூகம் விதித்துள்ள தடைகள் நீக்கப்படும் என்றும் ஈரானின் சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு அமெரிக்கா உதவி புரியும் எனவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அத்தோடு, ஈரான் அமெரிக்காவின் இந்த கோரிக்கைகளில் சிறிதளவே விருப்பம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எந்தவொரு பேச்சுவார்த்தையும் தங்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போக வேண்டும் எனவும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
English Summary
Pakistan Mediates on the USs 15 Point Demands to Ira