திரும்பி வந்த 'ஸாம்பி' புழு: 24,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்ற அதிசயம்! - விஞ்ஞானிகள் வியப்பு!
Zombie worm returns miracle that came back life after 24000 years Scientists amazed
வடகிழக்கு சைபீரியாவின் கடும் பனிக்கட்டியான பரப்பில் ஓடும் அலாசியா ஆற்றங்கரையில், காலத்தால் உறைந்திருக்கும் அதிசய உலகின் ஒரு சின்னமாக நுண்ணிய புழுவின் படிமம் ரஷிய அறிவியலாளர்களால் கண்டறியப்பட்டது. ‘யெடோமா’ என அழைக்கப்படும் நிரந்தர பனிப்படலத்தின் அடுக்குகளில், சுமார் -20 டிகிரி வெப்பநிலையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த உயிர் அசையாமல் உறைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அரிய படிமத்தை ஆய்வகத்திற்கு கொண்டு சென்ற ஆராய்ச்சியாளர்கள், அதை சூழ்ந்திருந்த பனிப்படலத்தை மெதுவாக உருக்கினர். அப்போது எதிர்பாராத வகையில், நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தது போல அந்த புழு மீண்டும் உயிர்ப்புடன் அசைவுகளைத் தொடங்கியது விஞ்ஞான உலகையே அதிர்ச்சியடைய வைத்தது.
சில நொடிகளில் அது நகரத் தொடங்கியது மட்டுமல்லாமல், உணவையும் உட்கொள்ள ஆரம்பித்தது என்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இதில் முடிவில்லை; அதன்பிறகு நிகழ்ந்த சம்பவமே மிகப் பெரிய புதிராக மாறியது. எந்த துணையும் இன்றி, தனித்துவமான இனப்பெருக்க முறையில் அந்த புழு புதிய குட்டிகளை உருவாக்கத் தொடங்கியது.
உருவான குட்டிப் புழுக்களும் தாயின் அமைப்பை முழுமையாகப் பிரதிபலித்து, எந்தவித குறைபாடுகளும் இன்றி வளர்ந்தது அறிவியல் உலகில் இதுவரை அரிதாகக் காணப்பட்ட நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.ரேடியோ கார்பன் ஆய்வுமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், இந்த புழு சுமார் 23 முதல் 24 ஆயிரம் ஆண்டுகள் வரை பனியில் உறைந்து இருந்திருக்கலாம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சில உயிரினங்கள் கடுமையான சூழலை சமாளிக்க, உடல் செயல்பாடுகளை முற்றிலும் மந்தப்படுத்தும் ஒரு உறைநிலை நிலைக்கு செல்வது அறியப்படுகிறது. அந்த நிலையில், உயிரின் செயல்கள் மிகக் குறைந்த அளவுக்கு தள்ளப்பட்டு, காலம் நின்றுவிட்டது போன்ற அமைதி நிலவுகிறது.
ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பனிக்கட்டில் உறைந்திருந்த ஒரு உயிர் மீண்டும் உயிர்ப்புடன் எழுந்து, இயல்பான செயல்பாடுகளைத் தொடர்வதோடு மட்டுமல்லாமல் இனப்பெருக்கத்தையும் மேற்கொள்ள முடியும் என்பதற்கு இது முதன்முறையாக உறுதியான சான்றாக பார்க்கப்படுகிறது என ரஷிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலர் இதனை “மரணம் கடந்த புழு” என அழைத்தாலும், அறிவியல் பார்வையில் இது மரணம் அல்ல; உயிரின் இயக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆழ்ந்த உறைநிலை மட்டுமே என்பதும் விளக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Zombie worm returns miracle that came back life after 24000 years Scientists amazed