வேலை வாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கை; மதுரையில் ‘காக்ரோச்’ இயக்க இளைஞர்கள் பேரணி..!
Youth from the Cockroach Movement stage a rally in Madurai demanding employment opportunities
வேலையின்மை, போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்த்து கரப்பான் பூச்சி (காக்ரோச் ) என்ற பெயரில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இயக்க பேரணி மதுரையில் இன்று நடைபெற்றது.
காந்தி மியூசியத்தில் இருந்து தமுக்கம் மைதானம் வரை நடைபெற்ற இப்பேரணியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்த பேரணியில் ஊழலை எதிர்த்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்த பேரணியை ஒருங்கிணைத்த 'காக்ரோச்' இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வா பேசுகையில் கூறியதாவது;
சமீபத்தில் நீதிபதி ஒருவர், இளைஞர்கள் கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணி போல தொந்தரவு செய்கின்றனர் என கருத்து தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வேலையின்மை, வாழ்வாதார சிக்கல்களில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள் தங்களை ‘கரப்பான் பூச்சி’ என அடையாளப்படுத்திக் கொண்டு நாடு முழுவதும் ஒன்றிணைகின்றனர்.

இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு போன்றவை இளைஞர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது என்று விமர்சித்துள்ளார். மேலும், நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை எட்டாக்கனியாக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2014-இல் ஆட்சிக்கு வந்தபோது, ஆண்டுக்கு 02 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என, மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று செல்வா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Youth from the Cockroach Movement stage a rally in Madurai demanding employment opportunities