பழனி கோவில் உண்டியலில் நூதன முறையில் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய வாலிபர்.!!
youth arrested for steal palani temple
திண்டுக்கல் மாவட்டத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக பழனி தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு பல்வேறு ஊர்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், உண்டியலில் காணிக்கை அதிகளவில் இருக்கும்.
அப்படி வரும் காணிக்கைகளை அவ்வப்போது எண்ணுவது வழக்கம். அந்த வகையில், பழனி முருகன் கோவிலில் வழக்கம்போல் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரேயொரு உண்டியலில் மட்டும் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தன.

இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உண்டியல் இருந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அதில், காகித அட்டையை உண்டியலில் பணம் விழவிடாமல் வைத்து, நூதன முறையில் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்ததில், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் இந்த நூதன திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்து அவரை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
youth arrested for steal palani temple