வீட்டிற்குள் புகுந்து வெறிச்செயல்...ஆசிரியையை கட்டிப்போட்டு நகை பறித்த பெண்கள்...! - அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் சோழவந்தானில் தனியாக இருந்த ஆசிரியை ஒருவரை தாக்கி, கை, கால்களை கட்டிப்போட்டு தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பர்தா அணிந்து வந்து கைவரிசை காட்டிய இரு பெண்களை காவலர்கள் கைது செய்த நிலையில், அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட ஆசிரியையின் தோழி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.சோழவந்தான் மார்க்கெட் சாலை பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் வசித்து வருபவர் கார்த்திகேயன்.

இவரது மனைவி ராஜலட்சுமி, 43. அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், வீட்டிலேயே மாணவர்களுக்கு தனிப்பயிற்சியும் நடத்தி வந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை முன்கூட்டியே நோட்டமிட்டதாகக் கூறப்படும் பர்தா அணிந்த இரு பெண்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

சற்றும் எதிர்பாராத வகையில் ராஜலட்சுமியை தாக்கிய அந்தப் பெண்கள், அவரது வாயில் துணியை வைத்து சத்தம் வெளியே வராமல் தடுத்துள்ளனர். தொடர்ந்து கை, கால்களை கட்டிப்போட்டதுடன், அவரை அடித்து உதைத்துள்ளனர்.பின்னர் ராஜலட்சுமியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், ராஜலட்சுமிக்கு உதவியதுடன் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சோழவந்தான் காவலர்கள், ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்தி கொள்ளை சம்பவம் தொடர்பான தகவல்களைச் சேகரித்தனர்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் ஆலோசனையின்படி தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை காவலர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், சம்பவத்தன்று பர்தா அணிந்து சென்ற இரு பெண்களின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.

அந்தக் காட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சோழவந்தான் அருகே தென்கரையைச் சேர்ந்த கார்த்தியின் மனைவி அன்னபூரணி, 41, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வத்தின் மனைவி கனிமொழி, 36, ஆகியோர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இதில் அன்னபூரணி, நகைகளைப் பறிகொடுத்த ஆசிரியை ராஜலட்சுமிக்கு ஏற்கனவே அறிமுகமான தோழி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜலட்சுமி வீட்டில் தனியாக இருக்கும் தகவல் உள்ளிட்ட விவரங்களை அறிந்திருந்ததால், அவரை குறிவைத்து இந்தச் சம்பவத்தைத் திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கலாம் என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ஆய்வாளர் சுப்பையா மற்றும் உதவி ஆய்வாளர் அழகர்சாமி தலைமையிலான காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அன்னபூரணி மற்றும் கனிமொழி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 6 பவுன் தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.ஆசிரியையின் வீட்டில் பர்தா அணிந்து சென்று கை, கால்களை கட்டிப்போட்டு நகை பறித்த சம்பவத்தில், அவருக்கு நெருக்கமான தோழியே முக்கிய பங்கு வகித்திருப்பது சோழவந்தான் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women who broke house and robbed teacher her jewelry Arrest made hurry


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->