மீண்டும் தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை: அடுத்தடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளால் நவம்பர் இறுதி வரை மழைக்கு வாய்ப்பு!
TN Rain IMD
வடகிழக்குப் பருவமழையின் முதல் இரு சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் இருந்து மழை சற்று குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், தென் சீனக் கடலில் இருந்து கிழக்குக் காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்குக் காற்றும் சேர்ந்து வடகிழக்குக் காற்றாக நாளை (நவம்பர் 11) முழுமையாகத் தமிழகத்தினுள் வர இருக்கிறது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) இரவில் இருந்தே பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 13 முதல் 15 வரை மழையில் சற்று இடைவெளி ஏற்படலாம். அப்போது இரவில் பனிப்பொழிவு அதிகமாகவும், பகலில் மேகக்கூட்டங்களுடனும் வானிலை இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்தடுத்த சுழற்சிகள் (நவம்பர் 16 முதல்):
தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரின் கூற்றுப்படி, அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது.
நவம்பர் 16 முதல்: இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, நவம்பர் 16 (ஞாயிற்றுக்கிழமை) முதல் வடகிழக்குப் பருவமழையை மீண்டும் தீவிரப்படுத்தும்.
நவம்பர் 17 முதல் 19: சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களிலும் மழை இருக்கும்.
நவம்பர் 20-க்கு பிறகு, தாழ்வுப் பகுதிகள் தமிழகக் கடற்கரைப் பகுதியை நோக்கி வருகின்றன. இதில் ஒன்று நவம்பர் 21-ல் தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், நவம்பர் 25-க்குப் பின் உருவாகும் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம், இம்மாத இறுதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், டிசம்பர் முதல் பாதி வரையும் நல்ல மழைக்கான சூழல் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.