புலிகள் சரணாலயத்தில் அதிரடி நடவடிக்கை...! - 53 ரிசார்ட்களில் சோதனை... 42 விடுதிகள் மூடி சீல் வைப்பு...!
Tiger Sanctuary Raids 53 Resorts 42 Lodges Shut Down and Sealed
தமிழக வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அனுமதியின்றிச் செயல்பட்டு வந்த 42 ரிசார்ட்களை மூடி சீல் வைத்துள்ளதாகத் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்படும் விடுதிகளை மூடக்கோரி கோவையைச் சேர்ந்த கற்பகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன் விரிவான விளக்கத்தை அளித்தார்.
சத்தியமங்கலம் வனப்பகுதியிலுள்ள 53 ரிசார்ட்கள் மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் 11 மட்டுமே உரிய அனுமதி பெற்றிருந்தன என்றும் தெரிவித்தார்.
மீதமுள்ள 42 சட்டவிரோத விடுதிகளும் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தினார்.அதேசமயம், அப்பகுதியில் இன்னும் சில ரிசார்ட்கள் இயங்கி வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்துப் புதிய அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு மூன்று வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட ரிசார்ட் உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
English Summary
Tiger Sanctuary Raids 53 Resorts 42 Lodges Shut Down and Sealed