திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு! ஸ்கூட்டரில் பாம்பு… துண்டுச்சீட்டால் தப்பிய வக்கீல்....!
Thrill Trichy court Snake scooter Lawyer escapes slip paper
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த கணபதி வக்கீல் தொழில் செய்கிறார். இவர் நீதிமன்ற பணிக்காக காலையில் ஸ்கூட்டரில் நீதிமன்றத்துக்கு செல்வது வழக்கம். நேற்று காலை 9.30 மணியளவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கட்டிடம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருந்தார்.

அப்போது சில மணி நேரங்களுக்குப் பிறகு, காலை 11.30 மணியளவில் அவரது ஜூனியர் வக்கீல் பதற்றத்துடன் ஓடி வந்து, “சார்… உங்கள் ஸ்கூட்டர் சீட்டின் மேல் ஒரு குறிப்பு இருக்கு!” என்று தெரிவித்தார்.
அதில், “இந்த வண்டியின் உள்ளே பாம்பு உள்ளது” என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி வாகன பதிவு எண், தேதி, நேரம் ஆகிய விவரங்களும் குறிப்பிடப்பட்டு, காகிதம் பறக்காமல் இருக்க ஒரு சிறிய கல்லும் மேலே வைத்து சென்றிருந்தனர்.
இதைக் கேட்ட கணபதி அதிர்ச்சியில் பதறியபடி வெளியே ஓடி வந்து சீட்டை பார்த்ததும் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தார். சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாகனத்தை முழுமையாக சோதனை செய்தனர்.
அங்கு முதலில் எதுவும் தெரியவில்லை. ஆனால் வக்கீலின் கோரிக்கையின்பேரில் ஸ்கூட்டரின் ஒவ்வொரு பாகத்தையும் கழற்றி ஆராய்ந்தபோது, இண்டிகேட்டர் பின்புறத்தில் சிறிய சாரைப்பாம்பு ஒளிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அதை பாதுகாப்பாக பிடித்து அகற்றிய தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
மேலும் நீதிமன்றத்துக்கு வந்த யாரோ ஒருவர் பாம்பு வாகனத்துக்குள் புகுந்ததை கவனித்து, மனிதநேயத்துடன் எச்சரிக்கை குறிப்பு எழுதி வைத்துச் சென்றிருப்பது பின்னர் தெரியவந்தது.
அந்த சிறிய சீட்டே பெரிய ஆபத்தை தவிர்த்தது.இந்த சம்பவத்தால் திருச்சி நீதிமன்ற வளாகம் அரை மணி நேரம் பரபரப்பாக மாறியது. ஒரு சாதாரண காலை, திடீரென ‘பாம்பு பதற்ற’மாக மாறிய இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
English Summary
Thrill Trichy court Snake scooter Lawyer escapes slip paper