தேதி குறித்த தி.மு.க கூட்டணி கட்சி... தயாராகும் தொண்டர்கள்..! - Seithipunal
Seithipunal


மருத்துவக்கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்திட வலியுறுத்தியும் அக்.20ல் ஆளுநர் மாளிகை முன்பும், மாவட்ட தலைநகரங்களிலும் சிபிஐ(எம்) சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தகுதி திறமை என்கிற பெயரில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் செயலில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு. இதன் ஒரு பகுதியாகவே நீட் தேர்வு திட்டமிட்ட சதியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தத் தேர்வைக் கூட முறையாகவும் துல்லியமாகவும் நடத்துவதற்கு திராணியற்றதாக உள்ளது மத்திய அரசு.

இது ஒருபுறமிருக்க கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழக அமைச்சரவை, நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒரு சட்டத்தை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இன்றுவரை அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் விதிவிலக்கின்றி இந்தச் சட்டத்தை ஆதரித்திருக்கின்றன. வழக்கமாக சமூக நீதிக்கு எதிராக, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தன்னுடைய வன்மத்தை கக்கும் பாஜக கூட இதற்கு எதிராக கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆயினும் ஆளுநர் இன்று வரை அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் காலம் கடத்திக் கொண்டு இருக்கிறார்.

இப்படி செய்வது தமிழக மக்களின் நலன்களையும் ஜனநாயக மாண்புகளையும் மீறுவதாகும். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இந்தச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இதுநாள்வரையிலும் அண்ணா பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களின் படாடோபங்களுக்கு இடையில் வளாகத் தேர்வுகளில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் வகித்தே வந்திருக்கிறது. தமிழகத்தினுடைய வளர்ச்சி, பாரம்பரியம், ஜனநாயக மாண்புகள், சமூகநீதி கோட்பாடுகள் ஆகியவை பற்றி தெரியாத ஒருவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார்.

அவர் கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் மாநில உரிமைகளுக்கு எதிராகவும், மாநில அரசை கலந்தாலோசிக்காமலும் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார். துணைவேந்தரின் இந்த அத்துமீறிய செயல் மாணவர் நலன்களை கடுமையாக பாதிக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே, சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் சூரப்பாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 20 அன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பும், மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM Party Announce Protest about Medical Seat Reservation 20 Oct 2020


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal