புத்தாண்டு கொண்டாட்டங்களில் மதுபான இடங்களுக்கு குழந்தைகள் அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை – சென்னை உயர் நீதிமன்றம்
Strict action will be taken if children are taken to liquor places during New Year celebrations Madras High Court
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடங்களுக்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதாக புகார்கள் வந்தால், உடனடியாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவேற்காட்டை சேர்ந்த எம். காமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மதுபானம் அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்து வரப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இது சட்டப்படி தவறானது என்றும், சிறார் நீதிச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய செயல்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதித்து, அவர்களின் வாழ்க்கையை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளதாகவும் மனுதாரர் கூறினார். எனவே, மதுபானம் அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அனுமதித்த நட்சத்திர விடுதிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புத்தாண்டு நெருங்கும் நிலையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, புத்தாண்டு கொண்டாட்டங்களில் நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது என்று தெளிவாக தெரிவித்தது.
மேலும், எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இதுபோன்ற புகார்கள் வந்தால், உடனடியாக விசாரணை நடத்தி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
English Summary
Strict action will be taken if children are taken to liquor places during New Year celebrations Madras High Court