காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது: எல்லையில் தொடரும் பதற்றம்!
Sri Lankan Navy Arrests 12 Karaikal Fishermen Tensions Rise as Mechanized Boat Seized
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விசைப்படகில் 12 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு கோடிக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை வழிமறித்தனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்கள் 12 பேரையும் அவர்கள் சிறைபிடித்தனர். மேலும், அவர்களுக்குச் சொந்தமான ஒரு விசைப்படகையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்களிடையே பெரும் சோகமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் நேரத்தில் இத்தகைய கைது நடவடிக்கைகள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கிவிடும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே பல தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் வாடி வரும் நிலையில், இந்தப் புதிய கைது நடவடிக்கை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
English Summary
Sri Lankan Navy Arrests 12 Karaikal Fishermen Tensions Rise as Mechanized Boat Seized