பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் அதிர்ச்சி... ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்...!
Shocking incident flight from Bangkok Chennai 3 crore gold seized
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 2 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று காலை பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது, மியான்மர் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தனர்.
அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரையும் தனியாக அழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையின்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சந்தேகம் மேலும் வலுத்ததை தொடர்ந்து, அவர்களது உடைமைகளை அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர்.இந்த தொடர்ந்து, இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டபோது, ஆடைக்குள் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து மொத்தம் 1 கிலோ 967 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3 கோடி என தெரிவிக்கப்படுகிறது.
தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மியான்மர் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் 30 வயது வாலிபர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தங்கம் எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்காக கடத்தி வரப்பட்டது, இந்த கடத்தல் பின்னணியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் தொடர்பான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Shocking incident flight from Bangkok Chennai 3 crore gold seized