சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர் அனோஜன் சிவராசாவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வெளியுறவு அமைச்சருக்கு எஸ்.ஜி.சூர்யா கோரிக்கை..!
SG Surya urges the External Affairs Minister to take steps to rescue Anojan Sivarasa a Sri Lankan Tamil sentenced to death in Saudi Arabia
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த தமிழரான அனோஜன் சிவராசாவை மீட்க வேண்டி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கோரிக்கை வைத்து கடிதம் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
''இலங்கையை சேர்ந்த 24 வயது தமிழரான அனோஜன் சிவராசா, சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளார். வரும் 17-ஆம் தேதியோடு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சட்ட ரீதியாக மேல் முறையீடு செய்வதற்கான கெடு முடிவடைகிறது. எனவே இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தலையிட்டு, அவரை மீட்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த செப்.28-ஆம் தேதிக்கு பிறகு அவரை அவரது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், அவர் சிறையில் தாக்குதலுக்கு ஆளானதாக தெரிகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு மற்றும் சவுதி அரேபியா இடையிலான இருதரப்பு உறவு அனைவரும் அறிந்தது. கடந்த 2019-இல் சவுதி சிறையில் இருந்த 850 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர். பிரதமர் மோடி, சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானை தொடர்பு கொண்டு இந்த மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டார். கடந்த 2024-இல் கத்தார் பிடியில் இருந்த 08 இந்திய கடற்படை அதிகாரிகளை மீட்டார்.
அந்த வகையில் இலங்கையை சேர்ந்த அனோஜன் சிவராசா வழக்கில் இந்தியா தலையிட்டு, அவரது தண்டனையை நிறுத்தி வைத்து, பாதுகாப்பாக நாடு திரும்ப உதவ வேண்டும்.'' என குறிப்பிட்டுள்ளார்.
அனோஜன் சிவராசாவுக்கு நடந்தது என்ன..?
இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்துக்கள் கடந்த ஜூன் மாதம் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு புனித பாத யாத்திரையை மேற்கொண்டனர். அவர்களோடு 'சுப்பிரமணியம்' என்று பெயரிடப்பட்ட நாயும் சென்றது. அந்த நாயை, முஸ்லிம் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இதைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார்.
ஆனால், இந்த விவகாரம் இலங்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறி இரு மதத்தினருக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவும் சமூக வலைதள விவாதத்தில் பங்கேற்று பதிலுக்கு பதிவுகளை பதிவிட்டு வந்தார். அதில், அவர் தமிழில் பதிவிட்டுள்ளார். இருப்பினும் தனது செயலை எண்ணி வருந்திய அவர், சில நிமிடங்களில் அதை நீக்கி உள்ளார். மேலும், வருத்தம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டார்.
இருப்பினும் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த இலங்கையை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர், அரபு மொழியில் அதை மொழிமாற்றம் செய்து, அனோஜன் சிவராசா பணியாற்றிய நிறுவனம் மற்றும் சவுதி அரசு அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் செய்துள்ளனர். இதையடுத்து ஜூலை மாதம் அனோஜன் சிவராசா சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஐந்து ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அரசுத் தரப்பு மேல்முறையீட்டில் அவருக்கு ஷரியா சட்ட விதிகளின் படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
SG Surya urges the External Affairs Minister to take steps to rescue Anojan Sivarasa a Sri Lankan Tamil sentenced to death in Saudi Arabia