2026-ஐ நோக்கிய அரசியல் வியூகம்: டெல்லியின் ஸ்கெட்ச்..! களமிறங்கும் சசிகலா! பாஜக-அதிமுகவின் மாஸ்டர் ப்ளான்..!
Political strategy towards 2026 Sketch of Delhi Sasikala enters the fray BJP AIADMK master plan
2026 சட்டமன்றத் தேர்தல் “மு.க.ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா? வேண்டாமா?” என்ற கேள்வியை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இந்த அரசியல் சூழலில் அதிமுக–பாஜக கூட்டணி திமுகவை வீழ்த்தும் நோக்கில் பல்வேறு வியூகங்களை தீட்டுகிறது. அதில் முக்கியமான அச்சு சசிகலாவாக மாறியுள்ளார்.
ஒருகாலத்தில் ஜெயலலிதா பின் அதிமுக பொறுப்பேற்கக்கூடாது என சசிகலாவை தடுத்த பாஜகவே, இன்று திமுகவுக்கு எதிராக போராட சசிகலாவின் குரலும் தேவைப்படும் நிலையில் உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பதவியை நோக்கி நடந்த சசிகலாவின் ஆசையை எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் நகர்வால் முடக்கியார். ஆனால், சசிகலா சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தில் அதிருப்தி நீடித்துக்கொண்டே இருந்தது. இதனால், 2026 தேர்தலுக்குள் அந்த விரிசலை முடித்து வைக்க சசிகலாவை மீண்டும் அதிமுக–பாஜக கூட்டணியின் பிரச்சாரத்தில் பயன்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது.
இதன் பகுதியாக எடப்பாடியின் மகன் மிதுன் நேரடியாக சசிகலாவிடம் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டெல்லியும் எடப்பாடியும் இந்த வியூகத்துக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்தின் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் வருமான வரித்துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகளால் முடக்கப்பட்டுள்ளன. தனது சொத்துக்களை மீட்டெடுக்கவும், வழக்குகளில் விடுபடவும் அதிகாரத்தின் ஆதரவு அவசியம். இந்த ஆதரவைப் பெற பாஜகவின் நெருக்கம் சசிகலாவுக்கு தேவையானதாகக் கருதப்படுகிறது.
எடப்பாடிக்கு சசிகலா ஆதரவு தேவைப்படுவதற்கான முக்கிய காரணம் முக்குலத்தோர் சமூக வாக்குகள். தென் மாவட்டங்களில் அதிமுகவின் பாரம்பரிய வாக்குத்தளம் முக்குலத்தோர் சமூகமே. ஆனால் எடப்பாடி தலைமையிலான காலத்தில் 10.5% வன்னியர் உள்ஒதுக்கீடு வழங்கியதால் முக்குலத்தோர் அதிருப்தி அடைந்தனர்.
இதன் விளைவாக 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தென்மாவட்டங்களில் மோசமான நிலையை சந்தித்தது. சில இடங்களில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதை சமாளிக்க எடப்பாடி, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமித்தாலும் அதிருப்தி குறையவில்லை.
இந்நிலையில், ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கியே திமுகவை வீழ்த்த முடியும் என பாஜக–அதிமுக கூட்டணியின் கணக்கு காட்டுகிறது. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் ஒதுக்கப்பட்ட சசிகலா, தற்போது மீண்டும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்கும் வகையில் மேடையேறும் வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.
அவர் நேரடியாக எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்காவிட்டாலும், “இரட்டை இலை சின்னத்திற்கு உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்” என மக்களிடம் வலியுறுத்துவார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Political strategy towards 2026 Sketch of Delhi Sasikala enters the fray BJP AIADMK master plan